ஜெயலலிதா என்னை பரிந்துரைத்தார் - ரஜினிகாந்த்
- IndiaGlitz, [Wednesday,September 07 2022]
பொன்னியின் செல்வன் நாவலில் இடம் பெற்ற வந்தியதேவன் கேரக்டருக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னை தான் தேர்வு செய்தார் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று நடைபெற்ற ’பொன்னியின் செல்வன்’ இசை வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இதில் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசிய போது, ‘பொன்னியின் செல்வன் நாவலில் இடம் பெற்ற பெரிய பழுவேட்டரையர் கேரக்டரில் தான் நடிப்பதாக மணிரத்னத்திடம் கேட்டதாகவும் ஆனால் மணிரத்னம் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் கூறினார்.
மேலும் இந்த கதைக்கு அருள்மொழிவர்மன் கேரக்டருக்கு கமல்ஹாசன், குந்தவை கேரக்டருக்கு ஸ்ரீதேவி, ஆதித்த கரிகாலன் கேரக்டருக்கு விஜயகாந்த், பெரிய பழுவேட்டரையர் கேரக்டருக்கு சத்யராஜ் ஆகியோர்களை நான் கற்பனை செய்து வைத்திருந்தேன் என்று கூறினார்.
மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் ஒருமுறை பொன்னியின் செல்வன் நாவலில் உள்ள வந்தியத்தேவன் கேரக்டருக்கு யார் பொருத்தமாக இருப்பார் என்று கேட்டபோது அவர் ’ரஜினிகாந்த்’ என்று கூறியது எனக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
கல்கி தற்போது உயிரோடு இருந்திருந்தால் அவர் காலில் விழுந்து நான் வணங்கியிருப்பேன். ’படையப்பா’ படத்தில் இடம்பெற்ற நீலாம்பரி கேரக்டர் நந்தினி கேரக்டரை மனதில் வைத்து தான் உருவாக்கப்பட்டது’ என்று ரஜினிகாந்த் கூறினார்.