அந்த 3 கேரக்டர்கள் நம் நெஞ்சை விட்டு அகலாது:  தேசிய விருது பெற்ற இயக்குனருக்கு ரஜினிகாந்த் கடிதம்!

  • IndiaGlitz, [Saturday,August 13 2022]

அந்த மூன்று கேரக்டர்கள் நம் நெஞ்சை விட்டு அகலாது என தேசிய விருது பெற்ற இயக்குனர் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் மூன்று விருதுகளை பெற்ற திரைப்படம் ’சிவரஞ்சனியும் சில பெண்களும்’. இயக்குனர் வசந்த் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: மதிப்பிற்குரிய இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் சார் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்குனர்களில் அவர்கள் மிகவும் முக்கியமானவர் வசந்த். பாலசந்தர் சார் அவர்களுக்கு மிகவும் பிடித்தவர். இயக்குனர் வசந்த் அவர்கள் இயக்கிய படங்கள் அனைத்துமே நல்ல கருத்தாழமிக்க அருமையான படங்கள்.

அவர் இயக்கியுள்ள ’சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம் அவர் இயக்கிய படங்களிலேயே மிகவும் அருமையான படம் என்று சொன்னால் அது மிகையல்ல. பாரதி கண்ட புதுமைப்பெண்கள் ஆன மூன்று பெண் கதாபாத்திரங்களை வைத்து மூன்று கதைகள் ஆக்கி இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த படத்தை பார்த்தவர்கள் அனைவரும் இந்த படைப்பை பாராட்டுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால் இந்த படத்தை பார்த்த பிறகு அந்த மூன்று கதாபாத்திரங்களும் நம் நெஞ்சை விட்டு அகலாது. இதுபோன்ற அருமையான படத்தை அளித்த வசந்த அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...’ என்று ரஜினிகாந்த் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.