ரஜினியின் 'லால் சலாம்' படப்பிடிப்பு எங்கே? எப்போது? கசிந்த தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'லால் சலாம்’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்த படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசை அமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று தகவல் கசிந்துள்ளது. காரைக்காலில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பத்து நாட்கள் நடைபெறும் என்றும் அதன் பிறகு அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பில் ராமு தங்கராஜ் கலை இயக்கத்தில் பூர்ணிமா ராமசாமி ஆடை வடிவமைப்பில் இந்த படம் உருவாகவுள்ளது.