மருத்துவமனையில் இருந்து ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்.. 'கூலி' படப்பிடிப்பு எப்போது?

  • IndiaGlitz, [Friday,October 04 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம் 30ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் இதயத்திலிருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் தமனியில் வீக்கம் இருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சர்ஜரி இல்லாமல் ஸ்டண்ட் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கபப்ட்டது. அதன் பின் அவர் ஐ.சி.யு. தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டார்.

இந்த நிலையில், நேற்று அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ரஜினிகாந்த் வீடு திரும்பியுள்ளார். இருப்பினும், அவர் மூன்று வாரங்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தில் அவரது காட்சியின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தான் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.