'தலைவர் 169' பட இயக்குனரை டுவிட்டரில் உறுதி செய்த ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தலைவர் 169’ படத்தின் இயக்குனரை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 169’ திரைப்படத்தை நெல்சன் இயக்க இருப்பதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் நெல்சன் இயக்கிய ‘பீஸ்ட்’ திரைப்படம் விஜய் ரசிகர்களையே கவரவில்லை என்று கூறப்படுவதால் ’தலைவர் 169’ படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்குமா? என்ற சந்தேகம் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டது. மேலும் ‘பீஸ்ட்’ படத்தை பார்த்த ரஜினிகாந்த் அதிருப்திஅடைந்ததாகவும், இதனால் ‘தலைவர் 169’ படத்தை அட்லி அல்லது தேசிங்கு பெரியசாமி இயக்கலாம் என கூறப்பட்டதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் ஏற்கனவே வெளியான ’தலைவர் 169’ படத்தின் ஸ்டில்லை பதிவு செய்து இந்த படத்தின் இயக்குனர் நெல்சன் தான் என்பதை மறைமுகமாக உறுதி செய்துள்ளார். ஏற்கனவே நெல்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் தான் இயக்கிய படங்களின் பட்டியலை வரிசைப்படுத்தியதில் ’தலைவர் 169’ படத்தையும் பதிவு செய்திருந்தார் என்பது தெரிந்ததே. எனவே ரஜினிகாந்த், சன்பிக்சர்ஸ், நெல்சன், அனிருத் கூட்டணி ‘தலைவர் 169’ படத்தின் மூலம் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.