'காக்கா-கழுகு' பஞ்சாயத்து தீராதா? 'தலைவர் 171' டைட்டில் கசிந்ததால் பரபரப்பு..!

  • IndiaGlitz, [Monday,April 01 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘தலைவர் 171’ படத்தின் டைட்டில் டீசர் வரும் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு ’கழுகு’ அல்லது ’ஈகிள்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அறிவிப்பு தான் ஏப்ரல் 22ஆம் தேதி வெளிவர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ’காக்கா கழுகு’ பிரச்சனை இப்போதைக்கு ஓயாதா? என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு மாதங்களுக்கு முன் ரஜினிகாந்த், ‘ஜெயிலர்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் ’காக்கா கழுகு’ கதை கூறியது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக ’லியோ’ படத்தின் வெற்றி விழாவில் விஜய்யும் காக்கா கழுகு குறித்து பேசினார்.

இதனை அடுத்து சமூக வலைதளங்களில் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் ’காக்கா கழுகு’ குறித்து காரசாரமாக மோதி வந்த நிலையில் தற்போது தான் இந்த பிரச்சனை கிட்டத்தட்ட ஓய்ந்து உள்ளது. இந்த நிலையில் திடீரென ரஜினியின் 'தலைவர் 171’ படத்திற்கு ’கழுகு’ அல்லது ’ஈகிள்’ என்ற டைட்டில் வைக்கப்படும் என்று கூறப்படுவதால் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் இந்த பிரச்சனை எழுந்து விடுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசன் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிய போது அவரது வெற்றிப்படமான ’விக்ரம்’ என்ற டைட்டிலை வைத்தது போல் ரஜினியை வைத்து தற்போது அவர் இயக்க இருக்கும் படத்திற்கும் ரஜினியின் பட டைட்டிலையே அவர் தேர்வு செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘கழுகு’ என்ற டைட்டிலில் ரஜினிகாந்த், ரதி நடித்த திரைப்படம் கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் இளையராஜா இசையில் இந்த படம் உருவாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது