அரசியல், சினிமாவில் காலம் வரும்போது மாற்றமும் வரும்: ரஜினிகாந்த்
- IndiaGlitz, [Friday,December 29 2017]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று நான்காவது நாளாக கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். முன்னதாக அவர் ரசிகர்கள் முன் பேசியதாவது:
அனைவருக்கும் வணக்கம். இன்று 4வது நாள். இன்னும் ரெண்டு நாள் தான் இருக்குது. கோவை எனக்கு மிக முக்கியமான இடம். அங்கு எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். என்னுடைய குருநாதர்களில் ஒருவரான சுவாமி சச்சிதானந்தர் அவர்கள் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர்தான். அவர் ஒரு எஞ்சினியர். ஆனால் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு பெற்றோர் சம்மதத்துடன் ஆன்மீக சேவையில் இறங்கினார். இலங்கை, அமெரிக்கா போன்ற நாடுகளில் அவர் ஆன்மீகத்தை பரப்பியவர், ஆன்மீகத்தை மட்டும்தான் பரப்பினார், மதத்தை அல்ல. அமெரிக்காவில் அவருக்கு லட்சக்கணக்கில் சீடர்கள் உள்ளனர். அவர்களில் டாடா, பிர்லா போன்ற பணக்காரர்கள், விஞ்ஞானிகள், நடிகர்கள் ஆகியோர்களும் அடங்குவர். அவருடைய அமெரிக்க ஆஸ்ரமம் சொர்க்கம் போல் இருக்கும்.
கோவை எனக்கு ஸ்பெஷலான ஊர். அண்ணாமலை, படம் ரிலீஸ் ஆன நேரத்தில் கோவைக்கு நண்பர் ஒருவரின் குடும்ப திருமணம் நிகழ்ச்சிக்கு வந்திருந்தேன். என்னுடன் சிவாஜி சார் அவர்களும் வந்திருந்தார். இருவரும் கோவை விமான நிலையத்தில் வந்திறங்கியபோது ரஜினி வாழ்க, தலைவர் வாழ்க என்று ரசிகர்கள் கோஷமிட்டனர். ஒரு மிகப்பெரிய நடிகர் அருகில் இருக்கும்போது என் பெயரை சொல்லி கோஷம் போட்டதால் எனக்கு உடம்பெல்லாம் பாம்பு ஓடுவது மாதிரி இருந்தது. ஆனால் சிவாஜி சார் அவர்கள் என்னை பார்த்து சிரித்தார். இது உன் காலம்டா, நல்லா உழைத்து, நல்ல படங்கள் கொடு, என்று ஆசிர்வாதித்தார். என்ன ஒரு பக்குவம், அவருக்கு நடிப்பு மட்டுமின்றி குணாசிதியம் இருந்ததை அன்றுதான் புரிந்து கொண்டேன். ஒரு மனிதனுக்கு மதிப்பும் மரியாதையும் வேண்டும், அது குணாதிசியம் இருந்தால் தான் கிடைக்கும். அதே குணாதிசியம் எம்ஜிஆருக்கும் இருந்ததால்தான் அவர் இன்று மக்கள் மனதில் இருக்க காரணமாக உள்ளது
சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கோவை விமான நிலையத்தில் நான் வந்தபோது என்னை சிறிது நேரம் கழித்து விமான நிலையத்தில் இருந்து வெளியே வரச்சொன்னார்கள். ஏன் என்று கேட்டேன். இன்னொரு பிரபல நடிகர் வந்து கொண்டிருக்கின்றார், அவருடைய ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றார்கள். எனவே அவர் போன பின்னர் வாருங்கள் என்று கூறினார். அப்போது எனக்கு சிவாஜி சார் சொன்னது ஞாபகம் வந்தது. இது அவர் காலம். அதனால் காலம் தான் முக்கியம். காலம் வரும்போது தானாக மாறும், தானா வேற ஆளுங்க வருவாங்க, அது சினிமாவாக ஆகட்டும், அரசியல் ஆகட்டும்' என்று ரஜினிகாந்த் கூறினார்.