குக் வித் கோமாளி பிரச்சனை.. முதன்முதலாக பிரியங்காவுக்கு ஆதரவாக பிரபலத்தின் குரல்..!

  • IndiaGlitz, [Thursday,September 19 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையே பிரச்சனை வந்ததாக கூறப்படும் நிலையில் இது குறித்து பல்வேறு பிரபலங்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் பாடகி சுசித்ரா உள்பட பல பிரபலங்கள் மணிமேகலைக்கு ஆதரவாக கருத்து கூறி வரும் நிலையில் முதல் முறையாக பிரியங்காவுக்கு ஆதரவாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போட்டியாளர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர் பூஜா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

மற்றவரை வெறுக்காமல், உங்களுக்கு பிடித்தவரை ஆதரிப்பது எப்படி என்று பலருக்கு தெரியவில்லை. உங்களுக்கு பிடித்தவர்களை ஆதரிக்கவும், அவர்களை உயர்த்தவும், உங்களுக்கு பிடிக்காதவரை கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தத் தேவையில்லை.

நம் சமூகம், குறிப்பாக பெண்களை எளிதில் குறைகூறி தகர்ப்பதில் ஆர்வமாக இருக்கிறது. பொது இடங்களில் உங்கள் கருத்துக்களை பகிர்வதற்கு முன், இரக்கம் மற்றும் பரிவை வளர்த்து கொள்ளுங்கள். உங்கள் வார்த்தைகள் மற்றவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் எவ்வளவு பாதிப்பு ஏற்படுத்தும் என்று யோசிக்க வேண்டும்.

நீங்கள் யாருக்கும் நீதிபதியாக இல்லை என்பதை உணருங்கள். நான் யாரையும் ஆதரிக்க வேண்டாம் என சொல்லவில்லை, ஆனால் மற்றவர்களை குறை கூறி அவமதிக்கவோ அல்லது திட்டவோ வேண்டாம். நீங்கள் நேரில் அறியாத நபர்களை பற்றி, தொலைக்காட்சியில் சில மணி நேரங்கள் பார்த்ததன் அடிப்படையில் முடிவெடுப்பது சரியல்ல.

நாம் பேசும் வார்த்தைகள் எவ்வளவு முக்கியம் என்பதில் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். உண்மை நிலையை அறியாமல் ஒருவரை அவமானப்படுத்துவது தவறானது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். சமூக ஊடகங்கள் உங்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு சக்திவாய்ந்தவை, ஆனால் உண்மையை தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். வெறுப்பை நிறுத்துங்கள். இந்த கொடூரமான சூழ்நிலையில் நாமும் நீண்ட காலம் நீடிக்க முடியாது என்பதை உணருங்கள். நம் அனைவரின் வாழ்க்கையும் போதுமான சவால்களை எதிர்கொண்டு கொண்டிருக்கிறது.

தயவுசெய்து மற்றவர்களை காயப்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட வேண்டாம். அன்பு பரப்ப முடியாவிட்டால் கூட, குறைந்த பட்சம் வெறுப்பை பரப்புவதை நிறுத்துங்கள். இவ்வாறு பூஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.