மூடப்பட்ட சூப்பர் மார்க்கெட்டுக்கள்: மீண்டும் அண்ணாச்சி கடைக்கு மாறும் பொதுமக்கள்! 

ஒரு காலத்தில் மளிகை பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் அனைவருக்கும் கை கொடுத்தது அண்ணாச்சி கடைதான். ஆனால் கார்ப்பரேட் கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட் வந்தபின்னரும், ஆன்லைன் வர்த்தகம் தொடங்கிய பின்னரும் அண்ணாச்சி கடைகள் அடிவாங்க தொடங்கின. இலவசம், ஆஃபர் ஆகியவைகளை அறிவித்த சூப்பர் மார்க்கெட்டுக்கள் முன் அண்ணாச்சி கடைக்காரர்களால் சமாளிக்க முடியவில்லை. எனவே அவர்களது வியாபாரம் பெருமளவு வீழ்ச்சி அடைந்தது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து சூப்பர் மார்க்கெட்டுக்களும் கடந்த சில நாட்களாக மூடப்பட்டுவிட்டன. ஆன்லைன் நிறுவனங்களும் தற்போது குறித்த நேரத்தில் ஆர்டர் செய்த பொருட்களை டெலிவரி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தற்போது மீண்டும் பொதுமக்கள் அண்ணாச்சி கடைகளை நோக்கி படையெடுக்க தொடங்கிவிட்டனர்.

ஒரு இயற்கை பேரிடர் ஏற்படும்போதுதான் பொதுமக்கள் சில விஷயங்களை உணர்ந்து கொள்கின்றனர். அந்த வகையில் தற்போது கொரோனாவால் மீண்டும் அண்ணாச்சி கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் குவிய தொடங்கியுள்ளது ஒரு நல்ல மாற்றமாக பார்க்கப்படுகிறது.