பொதுமக்களின் பாதுகாப்பு தான் எனக்கு முக்கியம்: சன்னிலியோன்
- IndiaGlitz, [Wednesday,December 20 2017]
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி 1, புத்தாண்டு தினத்தில் பெங்களூரில் உள்ள ஸ்டார் ஓட்டல் ஒன்றில் நடனமாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுக்களும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து கர்நாடக அரசு இந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்தது.
இதுகுறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார் கூறியபோது, 'புத்தாண்டு தினத்தையொட்டி நடைபெற இருப்பதாக கூறப்பட்ட நடிகை சன்னிலியோன் நடன நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்று உள்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதனால் அந்த நிகழ்ச்சியை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீஸ் அனுமதி இன்றி சன்னி லியோன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதால் இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம்' என்று கூறியுள்ளார்
இந்த நிலையில் சன்னிலியோன் தனது டுவிட்டரில், 'பெங்களூர் காவல்துறையினர் புத்தாண்டு நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டால் எனக்கும் எனது குழுவினர்களுக்கும், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பார்வையாளர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கூறியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு முதலில் முக்கியமானது. எனவே இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள மாட்டேன். இருப்பினும் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்' என்று கூறியுள்ளார். இதன்மூலம் பெங்களூரு சன்னிலியோன் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவது உறுதியாகியுள்ளது