சுனில் கவாஸ்கர் கொடுத்த ரூ.59 லட்சம் நிதியுதவி: ஒரு சுவாரஸ்ய கணக்கு
- IndiaGlitz, [Tuesday,April 07 2020]
கடந்த சில நாட்களாக கொரோனா வைரசுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் தொடர்ச்சியாக போராடி வரும் நிலையில் மத்திய மாநில அரசுகளுக்கு கைகொடுக்கும் வகையில் தொழிலதிபர்கள், திரையுலக பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் தாராளமாக நிதி உதவி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுனில் கவாஸ்கர் அவர்கள் தனது பங்கிற்கு 59 லட்ச ரூபாய் பிரதமர் நிவாரண நிதி மற்றும் மகாராஷ்டிரா மாநில முதல்வர் நிவாரண நிதியாக வழங்கி உள்ளார். இதில் பிரதமர் நிவாரண நிதியாக ரூபாய் 35 லட்சமும் மகாராஷ்டிர மாநில முதல்வர் நிவாரண நிதியாக ரூபாய் 24 லட்சமும் கவாஸ்கர் வழங்கியுள்ளார்.
சுனில் கவாஸ்கர் வழங்கிய 35 லட்சம் மற்றும் 24 லட்சம் என மொத்தம் 59 லட்சத்தில் ஒரு சுவாரஸ்ய கணக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சுனில் கவாஸ்கர் இந்திய அணிக்காக விளையாடி 35 சதங்களை அடித்துள்ளார் என்பதால் பிரதமர் நிவாரண நிதிக்கு 35 லட்சம் அளித்துள்ளதாகவும், அதேபோல் மும்பை அணிக்காக விளையாடி 24 சதங்கள் அடித்துள்ளார் என்பதால் மகாராஷ்டிரா மாநில முதல்வர் நிவாரண நிதியாக ரூபாய் 24 லட்சம் கொடுத்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த சுவாரஸ்ய கணக்கை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.