கூகுளின் தாய் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமனம்
- IndiaGlitz, [Wednesday,December 04 2019]
சென்னையை சேர்ந்த தமிழரான சுந்தர் பிச்சை அவர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக செயல்பட்டு வரும் நிலையில் தற்போது அவருக்கு கூடுதல் பதவி ஒன்றும் கிடைத்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி பேஜ் என்பவர் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் என்ற நிறுவனத்திற்கு தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்தார். இந்த நிலையில் இந்த பதவிக்கு சுந்தர் பிச்சையை அவர் தேர்வு செய்துள்ளார். கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியுடன், ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பையும் சுந்தர் பிச்சை அவர்கள் கூடுதலாக கவனிப்பார் என்று லாரிபேஜ் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். தனக்கு கூடுதல் பொறுப்பு வழங்கிய இணை நிறுவனர் லாரி பேஜ் அவர்களுக்கு தனது நன்றியை சுந்தர் பிச்சை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆல்பாபெட் என்ற நிறுவனத்தின் கீழ் பல்வேறு கிளை நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில் அதன் ஒரு நிறுவனமான கூகுள் நிறுவனத்திற்கு தலைமை செயல் அதிகாரியாக இருந்துவரும் சுந்தர் பிச்சை தற்போது ஒட்டு மொத்த நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏர்கவுள்ளது அவருக்கு மட்டுமன்றி தமிழர்கள் அனைவருக்கும் பெருமைக்குரிய ஒரு விஷயமாக கருதப்படுகிறது.
மதுரையில் பிறந்து சென்னையில் பள்ளி கல்லூரி படிப்பை முடித்து அதன் பின் ஐஐடியில் மேல் படிப்பை முடித்த சுந்தர் பிச்சை அவர்கள் தற்போது உலகின் நம்பர் ஒன் நிறுவனத்திற்கு தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டிருப்பது அனைத்து தமிழர்களும் பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயமாக கருதப்படுகிறது.