சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக் தான் சுந்தர் சியின் அடுத்த படமா?

  • IndiaGlitz, [Wednesday,September 02 2020]

கோலிவுட் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர் சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ’ஆக்சன்’ திரைப்படம் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் ’அரண்மனை’ படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆர்யா, ராஷிகண்ணா, சாக்ஷி அகர்வால் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கன்னட மொழியில் சூப்பர் ஹிட்டான ’மாயாபஜார் 2016’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை சுந்தர் சி வாங்கியுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தை அவருடைய இணை இயக்குனர் பத்ரி என்பவர் இயக்க உள்ளதாகவும் இந்த படத்தில் பிரசன்னா, ஷாம், அஸ்வின், யோகி பாபு உள்பட பலர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தை சுந்தர் சியின் அவ்னி சினி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறப்படுகிறது.