'சூனா பானா'வுக்கு இபாஸ் கொடுத்த மதுரை மாவட்ட நிர்வாகம்: பரபரப்பு தகவல்

சூனா பானா என்றாலே உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது வடிவேலு காமெடி கேரக்டர் தான். இந்த பஞ்சாயத்த கலைக்க என்ன பாடு பட்டேன், போ போ போ... என சூனா பானா கேரக்டரில் நடித்த வடிவேலுவின் நடிப்பே தனி. இந்த நிலையில் வடிவேலு கேரக்டரான ’சூனா பானா’ பெயரில் ஒருவர் மதுரை செல்ல இபாஸ் எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இபாஸ் நடைமுறைகள் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து தானியங்கி மூலம் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இபாஸ் கிடைத்து வருகிறது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒருவர் சூனா பானா, தகப்பனார் பெயர் சங்கி மங்கி என்ற பெயரில் இபாஸ் எடுத்துள்ளார். திருப்பூரில் இருந்து மதுரை செல்வதற்கு அவருக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் இபாஸ் வழங்கி உள்ளது.

மேலும் தனது வாகனத்தின் எண் டி.என்.01 எக்ஸ் 0000 என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளார். மொபைல் நம்பர் ஆதார் நம்பர் அனைத்தையும் முறைப்படி கொடுத்த இவர் இந்த இபாஸை பெற்றுள்ளார். எந்தவித காரணமும் கேட்காமல் பெயர் மற்றும் வண்டி எண்களைக் கூட சரிபார்க்காமல் தானியங்கி இபாஸ் வழங்கி வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக சூனா பானா பெயரில் இபாஸ் எடுத்துள்ளதாக அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவை உள்பட பல மாநிலங்களில் இபாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்திலும் இபாஸ் முறை ரத்து செய்யப்படலாம் என்றும் இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.