தோல்வியில் முடிந்த மீட்புப்போராட்டம்: 80 மணி நேரத்திற்கு பின் பிணமாக மீட்கப்பட்ட சுஜித்!
- IndiaGlitz, [Tuesday,October 29 2019]
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் கடந்த வெள்ளியன்று மாலை சுஜித் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் அந்த சிறுவனை உயிருடன் மீட்க மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர் கடந்த 80 மணி நேரமாக போராடினர்
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து சுஜித் மரணமடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் சுஜித்தின் உடலை மீட்க தேசிய மீட்பு குழுவினர் போராடினார். சுமார் 2 மணி நேரத்திற்குப் பின் சுஜித்தின் உடல் அழுகிய நிலையிலும் சிதறிய நிலையிலும் மீட்கப்பட்டது
இதனை அடுத்து சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது சுஜித்தின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊரான நடுக்காட்டுப்பட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது அங்கு சுஜித்தின் பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்படும் என்றும் அதன் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன
முன்னதாக சுஜித்தின் உடல் வைக்கப்பட்டிருந்த அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர். சுஜித்தை எப்படியும் உயிருடன் மீட்டுவிடலாம் என கடந்த 80 மணி நேரமாக மீட்புக்குழுவினர் போராடிய நிலையில் தற்போது உயிரற்ற உடல் மட்டுமே மீட்கப்பட்டு இருப்பதால் நடுக்காட்டுப்பட்டி கிராமம் மட்டுமின்றி தமிழகமே சோகமயமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது