9 வயதில் மோட்டார் பைக் சாம்பியன்… தமிழகச் சிறுவனின் தெறிக்கவிடும் சாதனை!!!
- IndiaGlitz, [Tuesday,October 13 2020]
செல்போன் திரையைத் தொட்டு விடீயோ கேம் விளையாடும் வயதில் பைக்கை பேய் வேகத்தில் ஓட்டுகிறான் தமிழகத்தைச் சேர்ந்த சுஜன். 9 வயதே ஆன சுஜன் தற்போது இருசக்கர மோட்டார் பைக் பந்தயங்களில் தேசிய அளவில் சாதனை படைத்து இருக்கிறான். மேலும் கோவா, கொச்சி பெங்களூர், பூனே போன்ற நகரங்களில் நடைபெற்ற பைக் ரேசில் கலந்து கொண்டு சாம்பியன்ஷிப் பட்டங்களையும் வாங்கிக் குவித்து இருக்கிறான்.
இவனுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர் கூறும்போது, “பொதுவா சின்ன பசங்களுக்கு இதுபோன்று நிறைய ஆர்வம் இருக்கும். சர்வதேச அளவில் நடைபெறும் பைக் ரேசில் கலந்து கொள்வதற்காக வெளிநாடுகளில் எல்லாம் சிறுவர்களுக்கு 5-6 வயதில் இருந்தே பயிற்சி கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் நம்ம ஊரில் இதுபோன்ற வழக்கம் இல்லை. சுஜன் 7 வயதில் இருந்து பயிற்சி பெற்றும் மிக வேகமாக இந்த பயிற்சியில் தேறிவிட்டான். அவனுக்கு பைக் ஓட்டுவதில் ஒரு பேஷன் இருக்கிறது. அதைத்தவிர படிப்பிலும் இவன் படு சுட்டி” எனக் கூறுகிறார்.
4 ஆம் வகுப்பே படிக்கும் சுஜன் தன்னுடைய பைக் ரேசைப் பற்றிக்கூறும்போது நான் இதுவரை தேசிய அளவில்தான் வெற்றிப்பெற்று இருக்கிறேன். சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிப்பெற வேண்டும் என்பதே என்னுடைய கனவு எனக் குறிப்பிட்டு இருக்கிறான். குட்டிச் பசங்களா நினைக்கும் நம்ம ஊரு வாண்டுகளிடம் இதுபோன்ற அசாத்தியத் திறமைகளும் கனவுகளும் ஒளிந்து கொண்டு இருக்கிறது. அதை வளர்த்து விட வேண்டியது மிக அவசியம்.