சரத்பாபுவுக்கு அஞ்சலி செலுத்த கமல் ஏன் வரவில்லை: சுஹாசினி விளக்கம்..!

  • IndiaGlitz, [Tuesday,May 23 2023]

தமிழ் திரை உலகின் பழம்பெரும் நடிகர் சரத்பாபு நேற்று காலமான நிலையில் அவரது உடல் இன்று அஞ்சலிக்காக அவரது சென்னை வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்த் உட்பட பல திரையுலக பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் ’சட்டம்’ உட்பட பல திரைப்படங்களில் சரத்பாபு உடன் நடித்த உலக நாயகன் கமல்ஹாசன் அஞ்சலி செலுத்த வரவில்லை. ஆனால் அதே நேரத்தில் நேற்று கமல்ஹாசன் தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் ஏன் அஞ்சலி செலுத்த வரவில்லை என அவரது அண்ணன் மகளும் நடிகையும் இயக்குனருமான சுகாசினி விளக்கம் அளித்துள்ளார். கமல்ஹாசன் தற்போது ’இந்தியன் 2’படப்பிடிப்பில் உள்ளார் என்றும் அவர் ’இந்தியன் 2’ படத்தின் முக்கிய காட்சிக்காக மேக்கப் போட்டுள்ளதால் அவரால் வெளியே வர முடியவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் தொலைபேசி மூலம் சரத்பாபுவின் குடும்பத்தினரிடம் இரங்கல் தெரிவித்தார் என்றும் கூறினார். மேலும் சரத் பாபுவின் இறுதி சடங்கை கமல்ஹாசன் உடன் இருப்பவர்கள் தான் செய்து வருகின்றனர் என்றும் சுஹாசினி கூறினார்.

சரத்பாபு வட இந்தியராக இருந்தாலும் ஆந்திராவில் தான் அவரது குடும்பம் செட்டில் ஆனது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நம்ம ஊரைச் சேர்ந்தவர் என்றுதான் அவரை கொண்டாடினோம். தமிழில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார். சரத்பாபு ஒரு மிகச்சிறந்த மனிதநேயம் உள்ளவர், கமல்ஹாசன் ரஜினிகாந்த் உட்பட அனைவரிடமும் நட்புடன் இருந்தார் என்றும் சுஹாசினி தெரிவித்தார்.