ரஜினிகாந்த் - மணிரத்னம் இணையும் படம் குறித்து சுஹாசினி.. என்ன சொன்னார் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,October 16 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியான நிலையில், இந்த செய்தி குறித்து சுஹாசினி விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான ’தளபதி’ என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் மணிரத்னம் இணைந்த நிலையில், 33 ஆண்டுகளுக்கு கழித்து மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படம் ’தளபதி’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், மணிரத்னம் மனைவி மற்றும் நடிகை சுஹாசினி இது குறித்து கூறிய போது, ’அப்படி ஒரு எண்ணம் எதுவும் இல்லை என்றும், இது முழுக்க முழுக்க வதந்தி’ என்றும் தெரிவித்தார். இதனை அடுத்து, மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் இப்போதைக்கு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மணிரத்னம் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ’தக்லைஃப்’ என்ற படத்தை இயக்கி வரும் நிலையில், இந்த படத்தை முடித்த பின்னர் தான் அவரது அடுத்த படம் என்ன என்பது தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.