'பொன்னியின் செல்வன்' வெளியாகும் முன்பே விமர்சனமா? சுஹாசினி கேள்விக்கு நெட்டிசன்கள் பதில்!

மணிரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இன்றே டுவிட்டரில் ஒருவர் விமர்சனம் எழுதியதற்கு, உங்களால் மட்டும் படம் வெளியாகும் முன்பே எப்படி விமர்சனம் செய்ய முடிந்தது என மணிரத்னம் மனைவி நடிகை சுஹாசினி கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை இன்னும் சென்சார் அதிகாரிகள் தவிர வேறு யாருமே பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டுவிட்டரில் ஒருவர் தான் வெளிநாட்டு சென்சார் அதிகாரி என்று கூறிக் கொண்டு அனைத்து படங்களையும் ரிலீசுக்கு முன்பே விமர்சனம் செய்து அதற்கு ஸ்டார் ரேட்டிங்கும் கொடுத்து வருகிறார். அந்த வகையில் ‘பொன்னியின்செல்வன்’ திரைப்படத்துக்கும் அவர் விமர்சனம் எழுதி மூன்று ஸ்டார் என ரேட்டிங் அளித்துள்ளார். ஏற்கனவே நேற்று அவர் ’நானே வருவேன்’ படத்திற்கும் விமர்சனம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ விமர்சனத்திற்கு நடிகை சுஹாசினி கேள்வி எழுப்பியுள்ளார். யார் நீங்கள்? இன்னும் வெளிவராத படத்தை உங்களால் மட்டும் எப்படி பார்க்க முடிந்தது? என்று கேள்வி எழுப்ப, அதற்கு நெட்டிசன்கள் ’இவர் உருட்டுக்கு பெயர் போனவர், ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தையே இவர் பார்த்ததாக சொல்வார் என்றும் தெரிவித்தனர். மேலும் இவர் வெளிநாட்டில் தணிக்கை குழுவில் வேலை செய்வதாக கூறிக்கொண்டு அனைத்து படத்தையும் இவ்வாறுதான் விமர்சனம் செய்து வருகிறார் என்றும், இவரை ஏதாவது செய்து தடை செய்யுங்கள் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.