கமல்ஹாசனின் 'தக்லைஃப்' படப்பிடிப்பில் சுதா கொங்காரா.. வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Saturday,September 21 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக இயக்குனர் சுதா கொங்கரா தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கடந்த 1987 ஆம் ஆண்டு மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இணைந்த ’நாயகன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இருவரும் இணைந்திருக்கும் திரைப்படம் தான் ‘தக்லைஃப்’.

இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், விரைவில் படப்பிடிப்பு முடிவடைய உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், சற்று முன், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக இயக்குனர் சுதா கொங்கரா தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் உதவி இயக்குனராக சுதா கொங்கரா பணிபுரிந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது தனது சமூக வலைதள பதிவின் மூலம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், விரைவில் தொழில்நுட்ப பணிகள் ஆரம்பமாகும் என்றும், இந்த படத்தின் ரிலீஸ் தேதி உள்பட மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபைசல், பங்கஜ் திரிபாதி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.