கொரோனா வைரஸ் இப்படித்தான் இருக்கும்!!! புகைப்படம் வெளியிட்ட இந்திய மருத்துவக் கழகம்!!!
- IndiaGlitz, [Monday,March 30 2020]
கொரோனா பாதிப்பினால் உலகம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இக்கட்டான சூழலைச் சந்தித்து வருகிறது. இந்தியாவில் 1190 பேர் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதிச்செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், 29 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் கொரோனா வில்லனின் புகைப்படத்தை சில தினங்களுக்கு முன்பு இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழ் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் முதல் கொரோனா நோய்த்தொற்று, கேரள பெண் நர்ஸ் ஒருவருக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் நோய்த்தொற்றில் இருந்து தற்போது முழுவதும் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார். சிகிச்சையின்போது அவரின் நுரையீரலில் இருந்து சேகரிக்கப்பட்ட சளியை வைத்துக்கொண்டு இந்திய மருத்துவக் கழகம் ஆராய்ச்சியில் ஈடுபட்டது. அந்த ஆராய்ச்சியின்போது நுண்ணோக்கிக்கொண்டு கொரோனா வைரஸ் கிருமி இப்படித்தான் இருக்கும் எனக் கண்டறிந்து இந்திய ஆராய்ச்சிக் கழகம் புகைப்படம் வெளியிட்டு இருக்கிறது.
முன்னதாக, பிரான்ஸ் நாட்டின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான INSERM மும் வெளியிட்டு இருந்தது. கொரோனா novel CoVid-19 அறிவியல் குறியீட்டில் SARS_CoV-2 என்ற வைரஸ் மாதிரியை ஆராய்ந்து இந்தப்புகைப்படம் வெளியிடப்பட்டு இருந்தது. பிரான்ஸ் நாட்டின் தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்ட இந்தப் புகைப்படம் தான் முதல் கொரோனா வைரஸ் புகைப்படம் என்பதும் குறிப்பிடத் தக்கது.