2015-ல் சின்ன பட்ஜெட்டில் வெளியான சிறப்பான திரைப்படங்கள்

Successful small budget Tamil films of 2015

தமிழ் சினிமாவில் ரூ.100 கோடிக்கும் மேல் செலவு செய்து படம் எடுக்கும் டிரெண்ட் தற்போது வந்துவிட்டது. ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும் என்றால் திரையில் பிரமாண்டத்தை காட்ட வேண்டும், அந்த பிரமாண்டத்திற்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்ற தொழில்நுட்பம் தேவை, அந்த கிராபிக்ஸ் தொழில்நுட்பத்திற்கு கோடி கோடியாக பணத்தை கொட்ட வேண்டிய நிலை உள்ளது. சில சமயம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸின் செலவு ஹீரோவின் சம்பளத்தைவிட அதிகமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரமாண்டம் இன்றி, பெரிய ஸ்டார்கள் இன்றி முழுக்க முழுக்க கதை, திரைக்கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படங்களும், பெரிய ஸ்டார்களின் படங்களுக்கு இணையாக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டில் அவ்வாறு சின்ன பட்ஜெட்டில் வெளிவந்த சிறந்த படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

tamiluku_en_ondrai_aluthavum

தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்: அறிமுக இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கிய இந்த படத்தில் தினேஷ், நகுல், பிந்துமாதவி, ஐஸ்வர்யா தத்தா, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது மொபைல் போன்களின் டவர்கள் அனைத்துமே செயல் இழந்ததை அனுபவபூர்வமாக உணர்ந்தோம். இந்த படத்தின் கான்செப்டும் இதுதான். திடீரென சென்னை போன்ற நகரில் மொபைல்போன் டவர்கள் அனைத்தும் செயல் இழந்து போனால் என்ன நடக்கும்? என்பதை த்ரில்லிங்காக இந்த படத்தில் இயக்குனர் வெளிப்படுத்தியிருந்தார். இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

rajathanthiram

ராஜதந்திரம்: அறிமுக இயக்குனர் ஏ.ஜி.அமித் இயக்கியுள்ள இந்த படம் ஹீரோவின் திருட்டுத்தனமான ராஜதந்திரத்தை புத்திசாலித்தனமான விளக்குகிறது. ஒரு நகைக்கடையை கொள்ளை அடிக்க போகிறோம் என்பதை நகைக்கடை ஓனரிடமும், போலீஸிடமும் தெரிவித்துவிட்டு, நகைக்கடை ஓனரின் உதவியோடு அந்த திருட்டை தடுப்பது போல நடித்து எப்படி டபுள் கேம், ட்ரிபிள் கேம் ஆடுகிறார் நாயகன் வீரபாகு என்பதுதான் படத்தின் கதை. இரண்டாம் பாதியின் மின்னல் வேக திரைக்கதை இந்த படத்தின் வெற்றிக்கு கைகொடுத்தது.

kallappadam

கள்ளப்படம்: சினிமா எடுக்க வேண்டும் என்பதையே உயிர் மூச்சாக இருக்கும் ஹீரோ பல படிகள் ஏறி இறங்கியும் வாய்ப்பு கிடைக்காததால், வேறு வழியின்றி தனக்கு வாய்ப்பு தரமறுக்கும் தயாரிப்பாளர் ஒருவரின் வீட்டில் கொள்ளை அடிக்க முயல்கிறார். அந்த தயாரிப்பாளருக்கு ஒரு முன்னாள் நடிகை ரகசிய காதலியாக இருக்க, அந்த காதலிக்கு ஒரு காதலன் இருக்க, ஹீரோவை போலவே இன்னும் சிலர் தயாரிப்பாளரின் பணத்தை கொள்ளை அடிக்க முயல, கடைசியில் என்ன நடந்தது என்பதை விறுவிறுப்பு கொஞ்சமும் குறையாமல் உருவான இந்த படத்தை எழுதி, இயக்கி, ஹீரோவாகவும் நடித்தவர் ஜே.வடிவேல் என்பவர். இவர் பிரபல இயக்குனர் மிஷ்கின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமும் ரசிகர்களின் ஆதரவை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

kakka-muttai

காக்கா முட்டை:  சென்னையின் சேரிப்பகுதியில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தின் இரண்டு சிறுவர்கள், அம்மா ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பாட்டியுடன் வாழுகின்றனர். இருவரும் தண்டவாளங்களின் ஓரங்களில் தவறி விழும் நிலக்கரியைப் பொறுக்கி விற்று அதில் கிடைக்கும் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்து அருகில் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட பீட்சா கடையில் பீட்சா சாப்பிட ஆசைப்படுகிறார்கள். 300 ரூபாய் பெறுமான பீட்சாவை அவர்கள் வாங்கவோ, சாப்பிடவோ முடிந்ததா என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையின் உதவியோடு நமக்கு தந்துள்ளார் அறிமுக இயக்குனர் இயக்குநர் மணிகண்டன். தனுஷ் மற்றும் வெற்றிமாறன் தயாரித்த இந்த படம் தேசிய விருது உள்பட பல உலகத்திரைப்பட விருதுகளையும் பெற்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தது. அதுமட்டுமின்றி வசூலிலும் நல்ல சாதனை புரிந்தது.

orange_mittai

ஆரஞ்சு மிட்டாய்: விஜய்சேதுபதி என்ற ஸ்டார் இந்த படத்தின் நாயகனாக இருந்தாலும் படத்தின் அழுத்தமான கதைதான் இந்த படத்தை அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தது. 55வயது பெரியவர் வேடத்தில் நடித்த விஜய்சேதுபதி தனிமை, அந்த தனிமையை போக்க அவர் ஆம்புலன்ஸை அழைப்பது, ஆம்புலன்ஸ் பணிக்காக தனது காதலையே துறக்கும் அளவுக்கு அந்த பணியை நேசிக்கும் ராஜ்திலக்,  ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வரும் ஆறுமுகம் பாலா என ஒருசில கேரக்டர்களை மட்டுமே வைத்து நகைச்சுவையுடன் ஒரு அழுத்தமான கதையை கூறியுள்ளார் இயக்குனர் பிஜுவிஸ்வநாத். இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் அனைவரின் மனதை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

kuttram_kadithal

குற்றம் கடிதல்: புதியதாக திருமணம் செய்த ஒரு ஆசிரியை திருமண விடுப்பு முடிந்து பள்ளிக்குச் செல்கிறார். சக ஆசிரியையின் வேண்டுகோளை ஏற்று அவரது வகுப்பை கவனித்துக்கொள்ளும்போது  அந்த வகுப்பில் தவறு செய்யும் ஒரு மாணவனை கோபத்தில் அடிக்க, அதனால் அந்த சிறுவனின் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. இந்த விஷயம் பள்ளி நிர்வாகத்தையும் ஆசிரியையும் பெரும் சிக்கலை ஏற்படுத்த கணவருடன் ஊரைவிட்டு ஓடுகிறார் ஆசிரியை. பின்னர் போலீஸின் அறிவுரைக்கேற்ப திரும்ப வந்து பாதிக்கப்பட்ட மாணவனின் தாயின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் உருக்கமான கதைதான் குற்றம் கடிதல். ஒரு ஆசிரியை என்பவர் மாணவர்களுக்கு இன்னொரு தாய் என்பதை அழுத்தமாக சொன்ன படம். தேசிய விருது பெற்ற இந்த படமும் வசூலில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

demonte-colony

டிமாண்ட்டி காலனி: தமிழ் சினிமாவில் பல பேய்ப்படங்கள் வெளிவந்திருந்தாலும் சென்னையில் உண்மையாகவே டிமாண்ட்டி காலனி என்ற பகுதி இருக்கும் இடத்தையே கதைக்களமாக வைத்து, அதில் உண்மை சம்பவங்களையும் கற்பனையையும் கலந்து இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கிய திரைப்படம்தான் டிமாண்ட்டி காலனி. அருள்நிதி, ரமேஷ்திலக், சனாத் என்ற மூன்றே மூன்று முக்கிய கேரக்டர்களை வைத்து முழுக்க முழுக்க திகிலை கலந்து ரசிகர்களுக்கு இந்த வெற்றி படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர்.

Yogi Babu, kirumi

கிருமி: மதயானைக்கூட்டம்' என்ற வெற்றி படத்தின் நாயகன் கதிர் நடித்த இரண்டாவது படம்.  காவல்துறையின் பச்சோந்தித்தனத்தை மிக அருமையாக தோலுரித்துக் காட்டிய படம்தான் கிருமி. திருமணமாகி குழந்தையுடன் உள்ள ஹீரோ, நண்பர்களுடன் வெட்டியாக பொழுதை போக்கி கொண்டிருக்கும்போது, போலீஸ் இன்ஃபார்மர் சார்லி உதவியுடன்  இன்ஃபார்மராக மாறுகிறார் நாயகன் கதிர். இதனால் அவருடைய பொருளாதாரம் உயர்ந்தாலும் முன்னெச்சரிக்கையின்றி அவர் செய்யும் சில காரியங்கள் அவரை சிக்கலில் மாட்டி விடுகிறது. காவல் துறை ஆய்வாளர்கள் இருவருக்கு நடுவே நடக்கும் பனிப்போரில் இன்பார்மர் ஹீரோ சிக்கி, அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் கதைதான் கிருமி. இந்த படமும் ரசிகர்களின் மனதை கவர்ந்ததோடு திருப்தியான வசூலையும் கொடுத்தது.

36vayathinile

36 வயதினிலே: நீண்ட வருடங்களுக்கு பின்னர் ஜோதிகா ரீ-எண்ட்ரி ஆன படம். மலையாளத்தில் 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' என்ற தலைப்பில் வெற்றி பெற்ற படம் என்றாலும், ஜோதிகாவின் நடிப்புக்காகவே ஓடிய படம். கணவனால் உதாசீனம் செய்யப்பட்ட ஒரு பெண் வெகுண்டு எழுந்து சொந்தக்காலில் நிற்பது மட்டுமே நாட்டின் ஜனாதிபதியின் பாராட்டையும் எப்படி பெறுகிறார் என்பதுதான் கதை. சூர்யாவின் தயாரிப்பில் ஜோதிகாவின் நடிப்பில் வெளிவந்த இந்த தரமான படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

49-o

49 ஓ: நீண்ட இடைவெளிக்கு பின்னர் கவுண்டமணி ஹீரோவாக ரீ-எண்ட்ரி ஆன படம். எந்த வேட்பாளருக்கும் ஓட்டு போட விரும்பாதவர்கள் 49ஓவுக்கு ஓட்டு போடலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இந்த 49ஓவால் என்ன பயன் என்பதை நகைச்சுவை மற்றும் அர்த்தமுள்ள வசனத்துடன் புதுமுக இளம் இயக்குனர் ஆரோக்கியதாஸ் இயக்கியுள்ள படம்., ரியல் எஸ்டேட் வியாபாரிகளின் மோசடியை தோலுரிக்கும் வகையில் அமைந்த இந்த படம் ஒரு கலகலப்பான பொழுதுபோக்கு மற்றும் ஆரோக்கியமான படமாகவும் அமைந்தது.

கோடி கோடியாய் பணத்தை கொட்டி செலவு செய்தாலும் அந்த படத்தில் சூப்பர் ஸ்டாரே நடித்தாலும் தோல்வியை தழுவும் என்பதை கோலிவுட் பல சந்தர்ப்பங்களில் மெய்ப்பித்துள்ளது. ஒரு படத்தின் வெற்றிக்கு கதை நாயகனோ, பிரமாண்டமோ, பெரிய பட்ஜெட்டோ முக்கியமில்லை. நல்ல கதை மற்றும் திரைக்கதையுடன் ஒரு படம் வெளிவந்தால் அதுதான் உண்மையான வெற்றியை தரும் என மேற்கண்ட பத்து படங்களும் கோலிவுட் திரையுலகிற்கு சொன்ன பாடங்கள் ஆகும்..

தமிழ் சினிமாவில் ரூ.100 கோடிக்கும் மேல் செலவு செய்து படம் எடுக்கும் டிரெண்ட் தற்போது வந்துவிட்டது. ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும் என்றால் திரையில் பிரமாண்டத்தை காட்ட வேண்டும், அந்த பிரமாண்டத்திற்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்ற...