ரஜினிக்கு படிப்பறிவு இல்லை, அதனால் அவர் அரசியலுக்கு லாயிக்கில்லை: சுப்பிரமணியம் சுவாமி
- IndiaGlitz, [Saturday,May 20 2017]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என்று கருத்து சொல்லாத அரசியல்வாதிகளே இல்லை என்று கூறும் அளவுக்கு கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளும் தங்களுடைய கருத்தை கடந்த சில நாட்களாக பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ரஜினி குறித்து பேசுவதால் தங்களை ஊடகம் நன்கு கவனிப்பதை அறிந்து இரண்டாவது சுற்றாக மீண்டும் கருத்து சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.
அந்த வகையில் ஏற்கனவே ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று கடுமையாக விமர்சனம் செய்து பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி நேற்று பெங்களூரில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மீண்டும் ரஜினியையும் அவரது ரசிகர்களையும் சீண்டும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
ரஜினிக்கு பாஜக கட்சியில் இடம் கொடுக்கக் கூடாது. மேலும் அவரிடம் உறுதியான கருத்து கிடையாது. ஒருநாள் ஒன்றை சொல்வார். அடுத்த நாள் அதை மாற்றிப் பேசுவார். ஒருநாள் ஜெயலலிதாவை எதிர்த்து பேசுவார். மறுநாள் அவருக்கே ஆதரவை தெரிவிப்பார். ரஜினி இப்படி ஸ்திரமாக அரசியல் செய்ய முடியாததற்கு காரணம், அவருக்கு படிப்பறிவு கிடையாது என்பதுதான் என்று கூறியுள்ளார்.
தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் இதற்கு முன்பும் சரி, இப்போதும் சரி, படிப்பறிவில்லாத எத்தனையோ தலைவர்கள் மக்கள் நலனுக்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளனர். அரசியலுக்கு வருவதற்கு படிப்பு ஒரு தகுதி என்று எந்த சட்டத்திலும் இல்லை என்று சுவாமிக்கு ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.