இராமரின் பூமியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.93? பாஜக மூத்தத் தலைவரின் வைரல் டிவிட்!
- IndiaGlitz, [Tuesday,February 02 2021]
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை ஏற்கனவே உச்சத்தை தொட்டு இருக்கும் நிலையில் நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு உள்ள 2021-22 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டால் மீண்டும் விலை உயர இருக்கிறது. சென்னையில் நேற்று பெட்ரோல் விலை 88.82 ரூபாய் என்ற அளவுக்கு விற்பனையாகியது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.81.71 என்ற அளவிற்கு இருந்தது. அதிகபட்சமாக மும்பையில் நேற்று பெட்ரோல் விலை 93 ஆகவும் இருந்தது.
இந்நிலையில் நேற்று பெட்ரோல், டீசல் மீது கூடுதல் செஸ் வரி விதித்து பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகள் மற்றும் டீசல் மீது 4 ரூபாய் கூடுதல் செஸ் வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இனிவரும் காலங்களில் பெட்ரோல், டீசல் விலை இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் இதனால் அத்யாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி இதிகாச காப்பியமான இராமாயணத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்களை வைத்து பெட்ரோல், டீசல் விலையை கிண்டல் செய்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள டெக்ஸ்ட் செய்யப்பட்ட டிவிட்டர் பதிவில் “இராமரின் பூமி எனச் சொல்லப்படும் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 93 ரூபாய். அதுவே சீதாவின் பூமியான நேபாள நாட்டில் 53 ரூபாய்க்கும் இராவணனின் பூமியான இலங்கையில் 51 ரூபாய்க்கும் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது” என பதிவிட்டு உள்ளார்.
இவரது பதிவிற்கு பதில் அளித்து உள்ள சிலர் நேபாளத்தில் பெட்ரோல் விலை ரூ.68.92 காசுக்கும் இலங்கையில் 60.60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது என்றும் சுப்பிரமணிய சுவாமி தவறான தகவலை பகிர்ந்து வருகிறார் என்றும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். ஆனால் இந்த விலை நிலவரத்தை ஒப்பீடு செய்து பார்த்தாலும் இராமரின் பூமியில் பெட்ரோல், டீசர் விலை மிக அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுப்பிரமணிய சுவாமி பதிவிட்டு உள்ள இந்தப் பதிவு நேற்று முதல் சமூக வலைத்தளப் பக்கத்தில் கடும் வைரலாகி வருகிறது.
— Subramanian Swamy (@Swamy39) February 2, 2021