கேசினோவில் ரஜினி: அரசியல்வாதிகளின் பகல் கனவு பலிக்குமா?
- IndiaGlitz, [Thursday,July 06 2017]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமெரிக்காவில் கேசினோ கிளப் ஒன்றில் இருப்பது போன்ற புகைப்படம் கடந்த சில மணி நேரங்களாக இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பாஜக பிரமுகர் சுப்பிரமணியம் சுவாமி தனது டுவிட்டரில் வெளியிட்டு, கேசினோ கிளப்பில் விளையாடும் ரஜினிக்கு அமெரிக்க டாலர்கள் எப்படி கிடைத்தது என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரணை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளர்.
சுப்பிரமணியன் சுவாமியின் பல கருத்துக்களை பாஜகவினர்களே கண்டுகொள்வது இல்லை. அவருடைய பல சர்ச்சைக் கருத்துகள் அவரது தனிப்பட்ட கருத்துக்கள் என்று கூறி பாஜக மேலிடம் கைகழுவி விட்டதை அவ்வப்போது தமிழக மக்கள் பார்த்து கொண்டு தான் வருகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் சகஜமான ஒரு விளையாட்டான கேசினோவை விளையாடியது குறித்து சுப்பிரமணியன் சுவாமி கூறியதை தமிழக மக்கள் சீரியஸாக எடுத்து கொள்வார்களா? என்பது கேள்விக்குறியே. மேலும் கேசினோவில் ரஜினி விளையாடினாரா? அல்லது வேடிக்கை பார்த்தாரா? என்பதை உறுதி செய்யாமல் ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் வைத்துக்கொண்டு அவர் மீது குற்றம் சுமத்துவது சரியா? என்பதுதான் நடுநிலையாளர்களின் கேள்வியாக உள்ளது.
ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்றும், ரஜினி அரசியலுக்கு வந்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் நினைக்கும் ஒருசில லெட்டர்பேட் கட்சிகள் வேண்டுமானால் இந்த கேசினோ பிரச்சனையை கையில் எடுத்து பெரிதாக்க முயற்சிக்கலாம். ஆனால் இதனால் ரஜினியின் இமேஜை பாதிக்க செய்யலாம் என்று கனவு காண்பது பகல் கனவில் தான் முடியும் என்று அரசியல் விமர்சகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.