ஜனாதிபதி பதவிக்கு இவர் ஒருவர்தான் தகுதியானவர். சுப்பிரமணியன் சுவாமி

  • IndiaGlitz, [Wednesday,April 26 2017]

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக உள்ளன. சமீபத்தில் நடந்த ஐந்து மாநில தேர்தலில் அமோக வெற்றி பெற்றதால் கிட்டத்தட்ட பாஜக தேர்வு செய்யும் வேட்பாளர்தான் அடுத்த ஜனாதிபதி என்பது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் எல்.கே.அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் உள்பட பலர் ஜனாதிபதி வேட்பாளருக்கான பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த பாஜக முடிவு செய்திருப்பதாகவும் ஒரு வதந்தி உலாவி வருகிறது.

இந்த நிலையில் பாஜக முத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி, அடுத்த ஜனாதிபதி பதவிக்கு குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் அவர்கள் மட்டுமே சரியான தேர்வாக இருக்கும் என்று தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே குஜராத்தை சேர்ந்த மோடி பிரதமராக இருக்கும் நிலையில் ஜனாதிபதியும் குஜராத்தை சேர்ந்தவராக இருப்பதில் தவறில்லை என்றும், நானும் குஜராத்தை சேர்ந்த மருமகன் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் மனைவி ரோக்ஸானா குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து குறித்து விளக்கமளித்த ஆனந்தி பென், இது சுவாமியின் தனிப்பட்ட கருத்து என்றும், இதுகுறித்து தான் எதுவும் குறிப்பிட விரும்பவில்லை என்றும் கூறினார்.