சினிமாவில் ஹீரோவாகும் இளம் கிரிக்கெட் வீரர்… அவரே சொன்ன தகவல் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,May 31 2023]

இந்தியக் கிரிக்கெட் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம்வரும் இளம் வீரர் ஒருவர் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே பல முன்னணி வீரர்கள் அவ்வபோது சிறப்பு வேடங்களில் நடித்துவரும் நிலையில் முக்கிய வீரர் சினிமாவில் நுழைய இருக்கும் தகவல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியக் கிரிக்கெட் அணியில் இளம் வீரராக இருந்துவரும் சுப்மன் கில் (23) இதுவரை இந்திய அணிக்காக 14 ஒருநாள் போட்டிகளிலும் 10 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். வலது கை பேட்ஸ்மேனாக இருந்துவரும் இவர் ஒரு சிறந்த பீல்டர் மற்றும் பவுலாராகவும் திகழ்கிறார். மேலும் குஜராத் டைட்டண்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிவரும் இவர் 16 ஆவது சீசனில் 3 சதம், 4 அரைச்சதங்களுடன் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே நம்பிக்கை பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஏற்கனவே டப்பிங் கொடுத்து சினிமாவில் நுழைந்து இருக்கிறார். அந்த வகையில் “Spider Man Across: The Spider verse” திரைப்படத்திற்காக இந்தி, பஞ்சாபி என்று இரு மொழிகளிலும் சுப்மன் கில் டப்பிங் பேசியுள்ளார். மேலும் சினிமாவில் நடிக்க இருப்பதாகவும் அவர் தகவல் தெரிவித்து உள்ளார்.

அதுகுறித்து பேசிய சுப்மன் கில், என்னிடம் உள்ள நடிப்பு திறனை வெளிப்படுத்த நினைக்கிறேன். ஆனால் நான் திரைப்படங்களில் நடிக்கலாம், நடிக்காமலும் போகலாம். திறன் குறித்து பேசுவதற்குக் காரணம் நான் நடிப்பு பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான். நான் வாழ்க்கையின் ஒரு பகுதியில் இதைச் செய்ய நினைக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் த்ரில்லர் திரைப்படங்களில் நடிக்க விரும்புவதாகவும் சுப்மன் கில் தெரிவித்து இருப்பது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.