சுபிக்சா சுப்பிரமணியன் கைது: ரூ.750 கோடி மோசடி செய்ததாக புகார்
- IndiaGlitz, [Wednesday,February 28 2018]
இந்திய தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்பட பலர் வங்கிகளில் கடன் பெற்று அதனை திரும்ப கட்டாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடி வரும் நிலையில் இன்று ரூ.750 கோடி பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்ததாக சுபிக்சா நிறுவனத்தின் உரிமையாளர் சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 1997ஆம் ஆண்டு ரூ.1200 கோடியில் சுபிக்சா என்ற பல்பொருள் அங்காடிகளை தமிழகம் முழுவதும் தொடங்கிய சுப்பிரமணியன் அந்த நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு இந்நிறுவனம் திடீரென முடங்கியது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த சுமார் 300க்கும் மேற்பட்டோர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை திருப்பி தரவில்லை என்று சுப்பிரமணியன் மீது புகார் எழுந்தது
இந்த நிலையில் சுப்பிரமணியன் திடீரென தலைமறைவானார். அவர் மீது ஏராளமான புகார்கள் குவிந்ததை அடுத்து அவரை தேடும் பணி தீவிரமாக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சுப்பிரமணியனை கைது செய்தனர். அவர் மீது 13 வங்கிகளில் ரூ.750 கோடி வரை கடன் பெற்று திருப்பி கட்டவில்லை என்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.