'தெறி'யில் பார்த்த அதே விஜய்யை பார்க்கலாம்: 'வாரிசு' குறித்து ஸ்டண்ட் இயக்குனர்!

  • IndiaGlitz, [Friday,October 28 2022]

தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தை வரும் பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் ’தெறி’ படத்தில் பார்த்த அதே இளமையான விஜய்யை ‘வாரிசு’ படத்தில் பார்க்கலாம் என்று ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து மேலும் கூறியதாவது:

’தெறி’ படத்தில் நான் எப்படி மிகவும் இளமையான விஜய்யை பார்த்து அவரது திறமையை கண்டு ஆச்சரியப்பட்டேனோ, அதேபோல ‘வாரிசு’ படத்திலும் 200 சதவீத உழைப்பை ஸ்டண்ட் காட்சியில் கொடுத்துள்ளார். அவர் ஸ்டண்ட் காட்சிகளை சொல்லிக்கொடுக்கும் போது அமைதியாக கவனிப்பார். அதன்பிறகு டேக் என வரும்போது அவரது ஆக்சன் வேற லெவலில் இருக்கும். ஸ்டண்ட் காட்சிகளில் அவரை விட மிகவும் சிறப்பாக யாராலும் நடிக்க முடியாது.

‘வாரிசு’ திரைப்படம் செண்டிமெண்ட் படமாக மிக சிறப்பாக வந்துள்ளது. இது ஒரு எமோஷனல் திரைக்கதையாக இருந்தாலும் இந்த படத்தில் நான்கு சண்டை காட்சிகள் உள்ளன. 3 சண்டை காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்ட நிலையில் இன்னும் ஒரு சண்டைக்காட்சியை விரைவில் படமாக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.

விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது.