நாளை நீட் தேர்வு எழுதாமல் விட்டால் மறுவாய்ப்பு இல்லை… உச்ச நீதிமன்றத்தின் அதிரடி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா முழுவதும் நாளை (செப்டம்பர் 13) நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. இதற்கான விதிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா தாக்கம் இந்தியா முழுவதும் மக்களிடையே கடும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா அச்சத்தால் ஒருவேளை நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து நாளை தேர்வு எழுத முடியாமல் விடுபடும் மாணவர்களுக்கு மறுதேர்வு எழுத அனுமதி வழங்க வேண்டும் என தேசிய தேர்வு முகமை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு இருந்தது. அந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து இருக்கிறது.
இதனால் நாளை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எழுதாமல் விடுபடும் மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக நீட் தேர்வை ஒத்தி வைக்குமாறு தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. குறிப்பாக கொரோனா காலத்தில் நீட் தேர்வை நடத்த அனுமதித்த உத்தரவை எதிர்த்து 7 மாநில அரசுகள் வழக்கு தொடுத்து இருந்தது. அந்த வழக்கையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வட மாநிலத்தைச் சார்ந்த ஆஷிஷ் மகேந்திரா என்பவர் புதிய ரிட் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் வரும் 13 ஆம் தேதி நடக்கவிருக்கும் நீட் தேர்வில் கலந்து கொள்ள முடியாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கும்படி தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது. மேலும் மறுவாய்ப்பு வழங்க முடியாவிட்டால் நாளை நடக்கவிருக்கும் நீட் தேர்வையே தள்ளிவைக்குமாறும் வழக்கு விசாரணையில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் நீதிபதிகள் அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர். ஷா கலந்து கொண்ட அமர்வில் நேற்று இந்த மனு அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அதில் “நீட் தேர்வு தொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதில் மீண்டும் வாதங்களை முன்வைக்க ஏதுமில்லை என்பதால் மனுதாரரின் அனைத்து கோரிக்கைகளும் நிராகரிக்கப் படுகின்றன. மேலும் நாடு முழுவதும் ஒரே விதமான கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு நீட் தேர்வு நடத்தப்படுவதால் தற்போது தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் எப்படி மறுதேதி வழங்க முடியும்? அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை” எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout