மெரினாவுக்கும் பரவியது மாணவர்களின் நீட் போராட்டம்
- IndiaGlitz, [Wednesday,September 06 2017]
கடந்த சில மாதங்களாகவே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மாணவர்கள், அனிதாவின் உயிர் தியாகத்திற்கு பின்னர் கொந்தளித்து நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து விரட்டியே தீருவது என்ற நோக்கத்துடன் களமிறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் சென்னை மெரீனாவில் மீண்டும் ஒரு போராட்டம் நடந்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் போலீசார், அவ்வப்போது மெரீனாவில் கூடுதல் பாதுகாப்பை போட்டு காத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்ற மாணவர்கள் சமாதியில் இருந்த தடுப்பை மீறி சமாதியின் அருகே உட்கார்ந்து நீட் தேர்வுக்கு எதிரான கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் ஜெயலலிதா சமாதியில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மாணவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அந்த இடத்தை விட்டு வெளியேற செய்யும் முயற்சியில் ஈடுபட்டன.ர் ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்ததால் வேறு வழியின்றி மாணவர்களை குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர்.