'அரியர் மாணவர்களின் அரசனே': முதல்வருக்கு புகழாராம் சூட்டிய மாணவர்கள்
- IndiaGlitz, [Thursday,August 27 2020]
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளி கல்லூரிகளில் உள்ள அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர பிற பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். யுஜிசி அறிவுறுத்தலின்படி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் மட்டும் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். முதல்வரின் இந்த அறிவிப்பு கல்லூரி மாணவர்களை குஷியாக்கியுள்ளது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதிலும் உள்ள மாணவர்கள், தேர்வு இல்லாமல் பாஸ் என அறிவித்த முதல்வருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர். இதில் ஈரோடு பகுதியை சேர்ந்த மாணவர்கள் ஒருபடி மேலே சென்று கட்-அவுட் வைத்தும் போஸ்டர் ஒட்டியும் முதல்வருக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.
’அரியர் மாணவர்களின் அரசனே’, ’ஐயா எடப்பாடியாரே நீர் வாழ்க வாழ்க’ என்று குறிப்பிட்டுள்ள மாணவர்கள் அந்த போஸ்டரில் ’எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு என்ற திருக்குறளையும் பதிவு செய்துள்ளனர்.
அரியர் மாணவர்கள் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் மற்றும் கட்-அவுட்டுக்கள் ஈரோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் முதல்வர் எடுத்துள்ள இந்த நல்ல பெயர் தேர்தலுக்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.