மீண்டும் ஒருமுறை கடற்கரையில் கூடிய இளைஞர்கள் கூட்டம்
- IndiaGlitz, [Thursday,February 02 2017]
சென்னை மெரீனா கடற்கரையில் கூடிய இளைஞர்களின் கூட்டம் தமிழினத்தின் அடையாளங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டை பீட்டா என்ற கொடிய அமைப்பிடம் இருந்து மீட்டு தந்தது. இந்நிலையில் இந்த போராட்டத்தின் வெற்றி காரணமாக இனி எந்த பிரச்சனைக்கும் மாணவர்கள் முன்வருவார்கள் என்ற நம்பிக்கை அனைவரிடத்திலும் தோன்றியது. அந்த நம்பிக்கையின்படி தற்போது எண்ணூர் கடலை சுத்தப்படுத்த மாணவர்கள் சாரை சாரையாய் கிளம்பியுள்ளனர்.
ஆம் கடந்த வாரம் சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு சரக்கு கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்து காரணமாக டன் கணக்கில் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடல் நீரில் கலந்தது. கடலில் மீன்கள் உள்பட லட்சக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டது.
மத்திய கப்பல்துறை அமைச்சகம் கடலில் கலந்த கச்சா எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் மீண்டும் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றிணைந்த மாணவர்கள், இளைஞர்கள் எண்ணூர் கடலை நோக்கி விரைந்து சென்று கடலை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக மாணவர்கள் ஆக்கபூர்வமான பணிகளில் இறங்கிவிட்டனர் என்பதை மீண்டும் ஒருமுறை இந்த நிகழ்வு உறுதி செய்துள்ளது.