நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண் பெற்ற மாணவிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம்!!!
- IndiaGlitz, [Wednesday,October 28 2020]
நீட் தேர்வில் எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் பொய் வழக்கு தொடுத்த மாணவி ஒருவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் கடும் பரபரப்பாகி இருக்கிறது. மகாராஷ்டிராவின் அமராவதி நகரைச் சேர்ந்த மாணவி வசுந்தரா போஜன். இவர் நடந்து முடிந்த மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமலே தன்னுடைய விடைத்தாள் தவறாக மதிப்பிடப்பட்டு இருக்கிறது என மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் வழக்குத் தொடுத்து உள்ளார்.
இந்த மனுவில் “நான் பத்தாம் வகுப்பு தேர்வில் 93.4% மதிப்பெண்களும் 12 ஆம் வகுப்பு தேர்வில் 81.85% மதிப்பெண்களும் பெற்றுள்ளேன். நீட் தேர்வில் 720 க்கு 600 மதிப்பெண் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் பூஜ்ஜிய மதிப்பெண் கிடைத்துள்ளது. எனவே எனது விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமை, மத்திய சுகாதாரத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகள் வரும் அக்டோபர் 26 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. அதையொட்டி மாணவி வசுந்தரா போஜனின் விடைத்தாளை தேசிய தேர்வு முகமை நீதிமன்றத்தில் சமர்பித்ததாகக் கூறப்படுகிறது. அந்த விடைத்தாள் வெற்றுத்தாளாக இருந்ததைப் பார்த்து பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.
ஆனால் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மாணவி வசுந்தரா தனது மனு மீது உறுதியாக இருந்ததுதான் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்நிலையில் மாணவியின் வழக்கறிஞர் அவரிடம் தனியாக கலந்து ஆலோசித்து பின்னர், “மாணவி வசுந்தரா நீட் தேர்வில் எந்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை. தனது தவறை மறைக்க பெற்றோர் உட்பட அனைவரிடமும் பொய் கூறியுள்ளார். இப்போதுதான் முதல் முறையாக அவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.
எனவே அவரது சார்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் தவறிழைத்த மாணவி வசுந்தராவுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.