தவறாக வெளியிடப்பட்ட நீட்தேர்வு ரிசல்ட்… மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி!!!
- IndiaGlitz, [Friday,October 23 2020]
கொரோனாவுக்கு நடுவிலும் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு நடைபெற்று முடிந்தது. அதையொட்டி அத்தேர்வில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி மறுவாய்ப்பும் வழங்கப்பட்டு பின்னர் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இத்தேர்வில் 720-க்கு 720 மதிப்பெண்களைப் பெற்று இரண்டு மாணவர்கள் முதன் முதலாக சாதனை படைத்தனர். ஆனால் வெளியிடப்பட்ட நீட் தேர்வு பட்டியலில் பல குளறுபடிகள் இருந்ததாகவும் முன்னுக்குப் பின் முரணான எண்ணிக்கை அதில் குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் மறு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் மதிப்பெண் வெளியிடப்பட்ட சில மணி நேரத்திலேயே அந்தப் பட்டியலை மியூட் செய்தும் வைத்தனர்.
இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தைச் சார்ந்த விதி சூர்யவன்ஷி எனும் மாணவி தன்னுடைய நீட் தேர்வு மதிப்பெண்யை இணையத்தில் பார்த்திருக்கிறார். அவருடைய பெயருக்கு நேராக 6 என்ற ஒற்றை இலக்கு எண் மட்டும் இருந்த நிலையில் அவருக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.
நன்றாகப் படிக்கும் விதி சூர்யவன்ஷியின் மதிப்பெண்ணை அவருடைய குடும்பத்தினரே நம்பாமல் OMR ஷீட்டை பார்ப்பதற்கு விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில் தன்னுடைய மதிப்பெண் ஒற்றை இலக்கத்தில் வந்திருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாத விதி சூர்யவன்ஷி கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் விதி சூர்யவன்ஷி உயிரிழந்த பின்பு அவருடைய மதிப்பெண் பட்டியலை பெற்றோர்கள் பார்த்து இருக்கின்றனர். அதில் விதி சூர்யவன்ஷி 560 மதிப்பெண்கள் பெற்றிருப்பதாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இச்சம்பவத்தை அடுத்து தவறான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டதால் இத்ந உயிரிழப்பு ஏற்பட்டதாகப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.