விஜய்யின் 'தெறி' மலையாள படமா?
- IndiaGlitz, [Wednesday,March 23 2016]
இளையதளபதி விஜய்யின் 'தெறி' படத்தின் பாடல்களும், டிரைலர்களும் மாபெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இந்த படத்திற்கும் கேரளாவுக்கு நிறைய கனெக்ஷன் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
'தெறி' படத்தில் விஜய்யின் பெயர் ஜோசப் குருவில்லா. பொதுவாக இந்த பெயரை மலையாளிகள்தான் அதிகம் வைப்பார்கள். மேலும் இந்த படத்தின் கதை கிட்டதட்ட 40% கேரளாவில்தான் நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஏராளமான மலையாள வசனங்களும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதாம். அட்லி தமிழில் எழுதிய வசனங்களை அவரது கேரள நண்பர்கள் மலையாளத்தில் மொழி பெயர்த்து கொடுத்ததாகவும், அந்த வசனங்களே படத்தில் பயன்படுத்தியுள்ளனர்.
மேலும் 'விண்ணை தாண்டி வருவாயோ' மற்றும் அட்லியின் முந்தைய படமான 'ராஜா ராணி' ஆகிய படங்கள் உள்பட பல மலையாள படங்களில் நடித்த பிரதீப் கோட்டயம் அவர்கள் இந்த படத்தின் முக்கிய கேரக்டரை ஏற்று நடித்துள்ளார். அவர் மட்டுமின்றி கிட்டத்தட்ட 200 மலையாள நடிகர்கள் சிறிய மற்றும் பெரிய ரோல்களில் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
கேரளா தனக்கு மிகவும் பிடித்தமான ஒரு இடம் என்றும், அந்த மாநிலத்தின் இயற்கையான சூழ்நிலையில் உணவு, மக்களின் பழக்கவழக்கங்கள் அனைத்தும் தனக்கு பிடிக்கும் என்றும் தன்னுடைய அடுத்த படம் மலையாள படமாகவும் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் அட்லி தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு நிகராக கேரளாவிலும் விஜய் ரசிகர்கள் பெரும்பாலும் இருப்பதாலும், மலையாள வசனங்கள் அதிகம் இந்த படத்தில் இடம்பெற்றிருப்பதாலும் 'கேரளாவில் இந்த படம் 'தெறி'க்க வைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.