சிலை அரசியல் குறித்து ஆவேச கருத்து தெரிவித்த நடிகர் பிரகாஷ்ராஜ்
- IndiaGlitz, [Wednesday,March 07 2018]
திரிபுரா மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றவுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் தலைவர் லெனின் சிலை அகற்றப்பட்டது. இதுகுறித்த எச்.ராஜாவின் சர்ச்சைக்குரிய பதிவு காரணமாக தமிழகத்திலும் பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. இதனையடுத்து உபியில் அம்பேத்கர் சிலை, கொல்கத்தாவில் ஜனசங்க நிறுவனர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜியின் சிலை என தொடர்ந்து கொண்டே செல்கிறது. எனவே இந்தியாவில் தற்போது சிலைப்போர் நடப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒருசிலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்
இந்த நிலையில் நாட்டில் ஆங்காங்கே நடக்கும் சிலை அரசியலை நிறுத்தி, கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுங்கள் என்று அரசியல்வாதிகளுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: லெனின், பெரியார், எஸ்.பி.முகர்ஜியின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. உங்கள் நிகழ்ச்சி நிரல் என்ன? நம் குழந்தைகளுக்கு எதைக் கற்றுக்கொடுக்கிறீர்கள்? இந்த சிலை அரசியலை தயவுசெய்து நிறுத்துங்கள்.. வன்முறை மூலம் வன்முறையையே அறுவடை செய்யமுடியும். உங்களின் அரசியல் வாக்குறுதி என்ன? மாற்றமா அல்லது மாநிலத்தில் குண்டாயிஸத்தைக் கொண்டுவருவதா? என்று பதிவு செய்துள்ளார்.