வயதில் மகள்போல மாறிய தாய்… அலப்பறை செய்து வசமா மாட்டிக்கொண்ட சம்பவம்!

  • IndiaGlitz, [Tuesday,December 14 2021]

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் 48 வயதான பெண் ஒருவர் தனது 22 வயது மகள் போலவே தன்னைக் காட்டிக்கொண்டதோடு பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட சம்பவம் தற்போது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. அந்தப் பெண் மகள் வயதில் மாறி மோசடி செய்தது மட்டுமல்லாமல் 2 வருடம் கல்லூரியில் இணைந்து படித்திருப்பதுதான் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

மிசோரி மாகாணத்தில் உள்ள மவுண்டன் வியூ பகுதியில் வசித்துவருபவர் லாரா ஓக்லெஸ்பி. 48 வயதான இவர் தன்னுடைய 22 வயது மகள் லாரன் ஹேஸின் பெயரை போலியாக தனக்கு வைத்துக்கொண்டு, தனது நடை, உடை, பாவனையையும் இளம்பெண்ணைப் போலவே மாற்றிக் கொண்டிருக்கிறார். கூடவே தனது மகளின் புகைப்படத்தை வைத்து ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை அனைத்தையும் வாங்கியிருக்கிறார். போதாதற்கு பாப்டிஸ்ட் பகுதியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ரூ.19 லட்சம் உதவித்தொகை பெற்று 2 ஆண்டுகள் கல்லூரி படிப்பையும் முடித்துள்ளார்.

இவை எல்லாவற்றையும் விட 22 வயதில் தன்னை மாற்றிக்கொண்ட லாரா ஓக்லெஸ்பி தன்னுடைய மகள் வயதில் இருக்கும் இளைஞர்கள் பலரும் டேட்டிங் சென்றுள்ளார். மேலும் அந்த இளைஞர்களிடம் பல மோசடி சம்பவங்களிலும் அவர் ஈடுபட்டிருக்கிறார். மேலும் ஸ்னாப்சேட்டில் தனது மகளின் புகைப்படத்தைப் பயன்படுத்தி கணக்கு ஆரம்பித்த அவர் இணைய வழியிலும் மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார்.

இப்படி கிடைத்த இடங்களில் எல்லாம் தனது மகளின் பெயர் மற்றும் புகைப்படத்தை வைத்து மோசடி சம்பங்களில் ஈடுபட்ட ஓக்லெஸ்பி தற்போது காவல் துறையால் கைது செய்யப்பட்டு ரூ.13 லட்சம் அபராதம் மற்றும் பரோல் கிடைக்காத 5 வருட சிறை தண்டனையைப் பெற்றுள்ளார். இந்தச் சம்பவத்தை பார்த்த நமது நெட்டிசன்கள் மகள் வயதில் வாழ வேண்டும் என நினைத்தது தவறல்ல… அதற்காக மோசடியில் ஈடுபட்டதுதான் தவறு என்று ஓக்லெஸ்பி குறித்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.