மூளையில் பிரச்சனை: மூன்றாவது டெஸ்ட்டில் இருந்து விலகிய ஸ்மித்!
- IndiaGlitz, [Saturday,August 24 2019]
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆசஷ் தொடர் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது என்பதும், இரண்டாவது டெஸ்ட் டிரா ஆனது என்பதும் தெரிந்ததே. தற்போது நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 179 ரன்களும், இங்கிலாந்து 67 ரன்களும் எடுத்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸை தற்போது ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.
இந்த நிலையில் முதல் டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்களிலும் சதமடித்து, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் 92 ரன்கள் எடுத்த ஸ்மித், இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து ஆஸ்திரேலியா அணியினர் விளக்கமளித்தபோது, 'இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டத்தின் போது, ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பவுன்சர் பந்தை எதிர்கொண்டபோது பந்து ஸ்மித்தின் தலையில் பட்டது. இதனால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளித்தபோது அவரது தலையில் அடித்த பந்தால், அவரது மூளையில் அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் தொடர்ந்து விளையாடினால் விபரீதமாகலாம் என்பதால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது சிகிச்சை பெற்று வரும் ஸ்மித், விரைவில் குணமாகி நான்காவது, ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.