ஊடகங்களுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் வேண்டுகோள்

  • IndiaGlitz, [Friday,January 20 2017]

ஜல்லிக்கட்டுக்காக கடந்த நான்கு நாட்களாக சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர்கள் இரவு, பகல் பாராமல் கடுங்குளிரிலும் மனம் தளராது போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு திரையுலகினர் பலர் கொடுத்த ஆதரவையும், உதவியையும் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் சங்கம் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மெளன அறப்போராட்டத்தை நடத்தவுள்ளது. இந்த போராட்டம் மாணவர்களின் போராட்டத்தை ஊடகங்களில் இருந்து திசை திருப்பும் வகையில் உள்ளதாக மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர். இந்த கருத்துக்கு மதிப்பளித்துள்ள நடிகர் சங்கத்தலைவர் நாசர் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எங்கள் போராட்டத்தை விட இளைஞர்களின் போராட்டம்தான் முக்கியம். எனவே நாங்கள் நடத்தும் போராட்டத்தை தயவுசெய்து ஊடகங்கள் ஒளிபரப்ப வேண்டாம் என்றும் இளைஞர்களின் போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்' என்றும் ஊடகங்களை கேட்டுக்கொண்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: இன்று தமிழகத்தில் இருந்து மட்டுமல்ல உலகம் முழுவதும் உணர்ச்சி கொந்தளிப்பில் மூழ்கி கிடைக்கின்றது. முதுபெரும் தமிழ்க்குடியின் ஒரு கலாச்சார சின்னம் முடக்கபட்டிருக்கின்றது. அதை மீட்டுக்கொண்டு வர தன்னிச்சையாக, தன்னார்வத்துடன் மாணவர் சமுதாயமும், இளைஞர்கள் போராடி வருகின்றனர். அவ்வெழுச்சியினால் ஈர்க்கப்பட்டு பெண்களும் குழந்தைகளும் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இந்த மாபெரும் போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் முழுமையான ஆதரவு அளிக்கின்றது. வெறும் பேச்சுக்களால் இல்லாமல் மெளனத்தை அமர்வாக கொண்டு மெளன அறவழி போராட்டத்தை நடத்துகிறது. நாங்கள் யாரும் கருத்துக்களையோ, ஆலோசனைகளையோ வாரி வழங்க போவதில்லை. எங்களது இந்த நிகழ்வை டிவி மற்றும் இணையதள நண்பர்கள் தயவுசெய்து வீடியோ பதிவு செய்ய வேண்டாம். அதற்கு பதிலாக இந்த போராட்டத்தின் காரணகர்த்தாவான வெயிலும், பனியிலும் கூடியிருக்கும் மாணவர்கள் சமுதாயத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் எங்களது ஒவ்வொரு வளர்ச்சியிலும் ஊடகங்களாகிய நீங்கள் எங்களுக்கு துணை புரிந்தீர்கள், நீங்கள் இல்லாமல் நடத்தும் இந்த நிகழ்வு நிகழ்த்துவது உண்மையில் மனம் கனத்தாலும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. இன்றைய சூழ்நிலையில் யாரை முன்னிறுத்த வேண்டுமோ அவர்களை நாம் இருவரும் சேர்ந்து முன்னிறுத்துவோம்.