0.5% க்கும் குறைந்த வேலைவாய்ப்பின்மை… இந்திய அளவில் அசத்தும் தமிழகம்!!!
- IndiaGlitz, [Tuesday,January 05 2021]
கொரோனா நேரத்திலும் தமிழகத்தின் தொழில்துறை பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அதனால் வேலைவாய்ப்பின்மையும் கணிசமாக குறைந்து உள்ளதாகக் கூறப்படுகிறது. தொழில்துறை மற்றும் வேளாண் நடவடிக்கைகளின் அதிகரிப்பு மற்றும் சேவைத் துறையின் பங்களிப்பு அதிகரிப்பு ஆகியவற்றுடன் தமிழ்நாட்டின் வேலையின்மை விகிதம் கடந்த மாதத்தில் இருந்து 0.5% ஆக குறைந்து உள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் 1.1% ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஒரே மாதத்தில் 0.5% ஆக குறைந்து இருப்பது தமிழக அரசின் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. மேலும் தேசிய அளவில் இந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஒரு மாதத்திற்கு முன்பு 6.5% ஆக இருந்தது. டிசம்பரில் 9.1% உயர்ந்தது. மேலும் பெரிய அளவில் உற்பத்தி மாநிலங்களாக கருதப்படும் குஜராத்தில் 3% இல் இருந்து 3.9% ஆக அதிகரிக்கவும் செய்தது. அதேபோல மகாராஷ்டிராவில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் 3.1% இல் இருந்து 3.9% ஆகவும் உயர்ந்தது. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை வேலைவாய்ப்பின்மை கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதத்தில் கணிசமாக குறைந்து இருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தின் வேலைவாய்ப்பின்மை 49.8% ஆக இருந்தது. இந்த அளவு படிப்படியாக ஜுலை மாதத்தில் 8.1% ஆக குறைக்கப்பட்டது. மேலும் செப்டம்பரில் 5% ஆகவும் அக்டோபரில் 2.2% ஆகவும் குறைந்து இருக்கிறது. இத்தகவலை இந்திய பொருளாதாரத்தைக் கணிக்கும் அமைப்பான CMIE தெரிவித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.