சூப்பர் ஸ்டார்களுக்கு இடையே ஜொலித்த அடுத்த நிலை ஹீரோக்கள்
- IndiaGlitz, [Friday,December 25 2015]
சூப்பர் ஸ்டார்களுக்கு இடையே ஜொலித்த அடுத்த நிலை ஹீரோக்கள்
தமிழ் சினிமாவின் ஒவ்வொரு காலகட்டத்திலும் இரண்டு பெரிய நடிகர்கள் பலம் பொருந்தியவர்களாக இருப்பார்கள். அவர்கள் இருவரின் ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்குரிய நடிகரின் படங்கள் வரும்போது கட் அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது என ஒரு திருவிழாபோல் கொண்டாடுவார்கள். அதே நேரத்தில் இரு நடிகர்களின் ரசிகர்கள் மோதிக்கொள்ளும் காட்சிகளும் அவ்வபோது நடைபெறும்.
தமிழ் சினிமாவில் தியாகராஜ பாகவதர்-பி.யூ.சின்னப்பா, எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினிகாந்த்-கமல்ஹாசன், என இரண்டு பெரிய நடிகர்களின் தாக்கம் இருந்து கொண்டே வந்தபோதிலும், இவர்களுக்கு இடையே ஒருசில நடிகர்கள் சத்தமில்லாமல் பல வெற்றி படங்களை கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்துவார்கள். சிலசமயம் பெரிய நடிகர்களின் படங்களே தோல்வியடையும் போது கூட, இவர்களின் படங்கள் எதிர்பாராமல் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றுள்ளது என்பது தமிழ் சினிமா வரலாற்றை படித்தவர்கள் அறிந்தவையே. இவ்வாறான நடிகர்கள் குறித்துதான் தற்போது நாம் இந்த கட்டுரையில் பார்க்கபோகிறோம்.
தியாகராஜ பாகவதர்-பி.யூ.சின்னப்பா: தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் என்று அழைக்கப்படும் இந்த இரண்டு நடிகர்களும் கடந்த 1940களில் பிரபலமாக இருந்தனர். அதிலும் தியாகராஜ பாகவதர் நடித்த 'ஹரிதாஸ்' திரைப்படம் ஒரே தியேட்டரில் மூன்று வருடங்கள் ஓடியதாகவும் கூறுவதுண்டு. அதேபோல் இந்த இரண்டு சூப்பர் ஸ்டார்களுக்கு இடையே பல வெற்றி படங்களை கொடுத்த நடிகர்களும் உண்டு. அவர்கள். டி.ஆர்.ராமச்சந்திரன், டி.ஆர்.மகாலிங்கம், கே.பி.சுந்தரம்பாள், எம்.கே.ராதா, ஆகியோர்களை கூறலாம். இவர்களில் எம்.கே.ராதா மற்றும் டி.ஆர்.ராஜலட்சுமி நடித்த 'சந்திரலேகா; திரைப்படம் சூப்பர்ஹிட் வெற்றி பெற்றது. ஜெமினி ஸ்டுடியோஸ் எஸ்.எஸ்.வாசன் தயாரித்து இயக்கிய இந்த படம் இந்தியிலும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆர்.-சிவாஜி: 1936ஆம் ஆண்டு சதிலீலாவதி படத்தில் அறிமுகமான எம்.ஜி.ஆரும், 1952ஆம் ஆண்டு 'பராசக்தி' படத்தில் அறிமுகமான சிவாஜி கணேசனும், சிறுவயதில் நண்பர்களாக இருந்தாலும், 1960களில் இருந்து தொழில்முறை போட்டியாளர்களாக மாறினார்கள். இருவரும் இணைந்து நடித்த ஒரே படமான 'கூண்டுக்கிளி' ரிலீசான பல திரையரங்குகளில் இருதரப்பு ரசிகர்களிடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டதால் அதன்பின்னர் இருவரும் இணைந்து கடைசி வரை நடிக்கவே இல்லை. இந்நிலையில் இந்த இரண்டு பெரிய நடிகர்களிடையே சத்தமில்லாமல் பல வெற்றி படங்களை கொடுத்த நடிகர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முத்துராமன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சிவகுமார், போன்ற நடிகர்கள் அனைவருமே எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியுடன் இணைந்து நடித்திருந்தாலும் தனித்தும் பல வெற்றி படங்களை கொடுத்தனர். இவற்றில் சி.ஐ.டி சங்கர், பூம்புகார், காதலிக்க நேரமில்லை, நத்தையில் முத்து, தீர்க்க சுமங்கலி, பாத காணிக்கை, நெஞ்சில் ஓர் ஆலயம், போன்ற பல வெற்றி படங்கள் வெளிவந்து எம்.ஜி.ஆர்.-சிவாஜி படங்களுக்கு இணையாக வசூலை பெற்றது.
குறிப்பாக காதல் மன்னன் என்று அழைக்கப்படும் ஜெமினிகணேசனையும் இந்த பட்டியலில் சேர்க்க வேண்டும். எம்.ஜி.ஆருடன் முகராசி என்ற படத்திலும் சிவாஜியுடன் பாவமன்னிப்பு, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், பாசமலர்,பார்த்தால் பசிதீரும், சரஸ்வதி சபதம் என பட படங்களில் நடித்திருந்தாலும் தனித்தும் பல சூப்பர் ஹிட் படங்களை இவர் கொடுத்துள்ளார். அவற்றில் முக்கியமானதாக கல்யாணபரிசு, வஞ்சிக்கோட்டை வாலிபன், பார்த்திபன் கனவு, கைராசி, தேனிலவு, காத்திருந்த கண்கள், கற்பகம், பூவா தலையா, இருகோடுகள், சாந்தி நிலையம், வெள்ளிவிழா போன்ற பல படங்கள் வெள்ளிவிழா கண்ட படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் - கமல்ஹாசன்: எம்.ஜி.ஆர், சிவாஜி நடித்து கொண்டிருக்கும்போதே கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் திரைக்கு வந்துவிட்டாலும் இவர்கள் இருவரிடையே உண்மையான போட்டி ஆரம்பமானது 1980களுக்கு பின்னர்தான். இவர்களுடைய காலகட்டத்தில் இருவருமே பல படங்களை வெற்றி படங்களையும், சில படங்களை தோல்வி படங்களையும் கொடுத்து கொண்டிருந்த நேரத்தில் இவர்களுக்கு இணையாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த நடிகர்களும் இருந்தனர். அவர்களில் முக்கியமானவர்கள் பிரபு, கார்த்திக், மோகன், சத்யராஜ், ராமராஜன், அர்ஜூன், போன்ற நடிகர்கள் சில சமயம் கமல்-ரஜினி படங்களுக்கு இணையான வெற்றி படங்களை கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் நடித்த சின்னத்தம்பி, பாலைவன ரோஜாக்கள், உதயகீதம், வருஷம் 16, கரகாட்டகாரன், சங்கர்குரு, என இன்னும் நூற்றுக்கணக்கான திரைப்படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
இதேபோல் ரஜினி-கமல் காலகட்டத்தில் எதிர்பாராத வெற்றிகளை கொடுத்த நடிகர் மோகன் என்றால் அது மிகையாகாது. கோவைத்தம்பி பிரதர்ஸ் என்ற நிறுவனம் மட்டும் தொடர்ந்து மோகனை வைத்து சுமார் 10 பத்து படங்களுக்கு மேல் தயாரித்து அனைத்தையும் வெற்றி படங்களாக மாற்றியது. பயணங்கள் முடிவதில்லை. இளமைக்காலங்கள், உதயகீதம், நான் பாடும் பாடல், இதயக்கோவில், உள்பட பல படங்கள் சில்வர் ஜூப்லி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திரையுலகை பொறுத்தவரையில் நிறைய உழைப்பும் திறமையும், கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தால் போதும், சூப்பர் ஸ்டார்களையும், சூப்பர் ஸ்டார்களுக்கு இணையாக உள்ளவர்களையும் வெற்றி பெறலாம் என்பதற்கு மேற்கண்ட நடிகர்களே உதாரணமாக இருந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.