வாக்கிங் செல்லும் இளம்பெண்களிடம் பாலியல் சீண்டல்: ஸ்டார் ஓட்டல் ஊழியர் கைது!

  • IndiaGlitz, [Saturday,October 16 2021]

சென்னையில் அதிகாலையில் வாக்கிங் செல்லும் பெண்களை டார்கெட் செய்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஸ்டார் ஹோட்டல் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணாநகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தனது மகளுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் தந்தையின் கண்முன்னே அவரது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டார்.

இதனை அடுத்து அந்த பெண் கூச்சலிட்ட நிலையில் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடந்தபோது முதலில் பெண்ணின் தந்தை புகார் கொடுக்க மறுத்ததாகவும், அதன் பின்னர் போலீசாரின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் புகார் கொடுத்ததாகவும் தெரிகிறது. இந்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் சாலையில் வாக்கிங் செல்லும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது யார் என்பதை கண்டுபிடித்தனர்.

அந்த நபர் தினமும் அதே பகுதிக்கு வந்து வாக்கிங் செல்லும் பெண்களிடம் சீண்டலில் ஈடுபட்டதை உறுதி செய்த காவல்துறையினர் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ஜெகநாதன் என்றும் 20 வயதான அந்த நபர் டெல்லியில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் கைதான ஜெகநாதன் மீது நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் சீண்டல் குறித்த புகார் அளித்த நிலையில் போலீசாரின் கவனிப்பில் அந்த நபர் விசாரணையில் தான் பாலியல் சீண்டல் செய்ததை ஒப்புக்கொண்டார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் நடந்ததை வெளியே சொல்ல தயங்குவார்கள் என்றும் புகார் அளிக்க மாட்டார்கள் என்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாகவும் ஜெகநாதன் விசாரணையில் கூறியுள்ளார். இதனையடுத்து அவர் மீது பெண்களை மானபங்கம் செய்தல், பெண் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதன் பின்னரே தற்போது பெண்கள் நிம்மதியாக வாக்கிங் சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.