கணவனும் மனைவியும், திரையரங்கை விட்டு விலகவே இல்லை.. ஸ்டார் பட அனுபவம் குறித்து இளன்..!

  • IndiaGlitz, [Monday,May 13 2024]

கவின் நடிப்பில் இளன் இயக்கத்தில் உருவான ’ஸ்டார்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் ரசிகர்களுக்கு நன்றி கூறி இளன் தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியான பதிவை செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

முதல் நாள் காட்சியில், முகம் அறியா சகோதரன் ஒருவன் ஓடி வந்து கேட்டான் : உங்கள கட்டி புடிச்சுக்கலாமா ? அந்த இரு கணம் அன்பு மட்டுமே வெளிப்பட்டது.

ஓர் கணவனும் மனைவியும், திரையரங்கை விட்டு விலகவே இல்லை. தேம்பி தேம்பி அழுதாள், நானும் அழுதேன் . அந்த கண்ணீரும் அன்பே.

திரையரங்கை சுத்தம் செய்யும் பணி பெண், கன்னத்தை பிடித்து சுத்திப்போட்டது என் தாயின் அன்பை வெளிப்படுத்தியது. பல இடங்களில் கைதட்டலும், கரகோஷமும் லவ் யூ என்று சொல்வதாகவே தோன்றியது .

இறுதிக்காட்சியின் வரவேற்பு என்னுள் உள்ள எழுத்தாளனை இன்னும் தைரியசாலியாக மாற்றியுள்ளது.

ரோலிங் கிரெடிட்ஸ் போட்டவுடன் எழுந்து செல்வதே வழக்கம். ஆனால், நான் கண்டதோ காதலியை விட்டு பிரிந்து செல்ல மனமில்லாத காதலர்களைதான்.

ஒரு சில [ பல ] விமர்சனங்கள், நான் ஒரு கலைஞனாய் மெருகேற உதவுகிறது. நம்பிக்கைக்கு நன்றி . கூட்டம் அலைமோதுகிறது . பகலிலும், மதியத்திலும், இரவிலும் சிலரின் கனவிலும் ஸ்டார் ஒளிர்கிறது .

- அன்புடன் இளன்