ஸ்டாலின் பழமொழி: குசும்பர்கள் ஆன நெட்டிசன்கள்
- IndiaGlitz, [Friday,March 23 2018]
திமுக தலைவர் கருணாநிதி பேசிய ஆயிரக்கணக்கான மேடைகளில் ஒரு பிழையும் இன்றி தெள்ளத்தெளிவாக பேசும் வழக்கத்தை உடையவர். அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் அவர் பேசும் தமிழ் மொழியில் யாரும் குற்றம் காண முடியாது.
ஆனால் அவரது மகனும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவ்வப்போது மேடையில் பேசும்போது திணறுவது மட்டுமின்றி மாற்றி மாற்றியும் பேசுவதால் நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு புத்தக விழாவில் பேசிய முக ஸ்டாலின் 'யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே' என்பது போல இந்த புத்தகம் வெளியாகும் முன்பே நமக்கு விடுதலை கிடைத்துவிட்டது' என்று பேசினார். உண்மையில் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே ' என்று தான் நிஜமான பழமொழி. இவ்வளவிற்கும் ஸ்டாலின் எழுதி வைத்த குறிப்பை பார்த்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலினின் இந்த பேச்சு நெட்டிசன்களுக்கு கிடைத்த அல்வா போல் ஆகிவிட்டது. அவர்கள் தங்களது குசும்புத்தனத்தை காட்ட ஆரம்பித்துவிட்டதால் #ஸ்டாலின்_பழமொழிகள் என்ற ஹேஷ்டேக் தற்போது டிரெண்டில் உள்ளது. நெட்டிசன்களின் ஒருசில குசும்பு கலாய்ப்புகள் இவை:
கற்பூரத்துக்கு தெரியுமா கழுதையின் வாசனை....
புளிக்க புளிக்க பாலும் பழகும்
ஒரு சோறுக்கு ஒரு பானை பதம்.
புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகும் ..,
நக்குற மாட்ட மேயிற மாடு கெடுத்துச்சாம்..
வேட்டியிலிருந்த ஓணானை எடுத்து வேலியில் விட்டு விட்டார்கள்
சும்மா கிடந்த ஆண்ட்டியை ஊதி கெடுத்தானாம் சங்கு
குஞ்ச மிதிச்சா கோழி செத்துரும்..
இன்னும் இதுபோல் நெட்டிசன்களின் குசும்புகள் நூற்றுக்கணக்கில் பதிவாகி வருகிறது. ஸ்டாலின் இவ்வாறு மாற்றி பேசுவது இது புதிதல்ல. ஏற்கனவே அவர் சுதந்திர தினத்தை குடியரசு தினம் என்றும், பிரதமர் மோடி என்பதற்கு பதிலாக மன்மோகன் சிங் என்றும் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.