சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் திடீர் கைது
- IndiaGlitz, [Wednesday,June 14 2017]
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே குழப்பமான அரசியல் சூழ்நிலை இருந்து வரும் நிலையில் இன்று பெரும் பரபரப்புகளுக்கு இடையே தமிழக சட்டமன்றம் கூடியது. இன்று காலை 10 மணிக்கு சட்டமன்றம் கூடியவுடன் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் ஜிஎஸ்டி மசோதாவை சட்டப்பேரவையில் வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி தாக்கல் செய்தார். இந்த சமயத்தில் கூவத்தூரில் நடந்த விவகாரம் குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் இதுகுறித்து பேச அனுமதிக்க முடியாது என்று சபாநாயகர் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இந்த நிலையில் 'எம்.எல்.ஏக்கள் விற்பனைக்கு' என்ற பதாதைகளுடன் திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் தனபாலின் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து அமளியில் திமுக எம்.எல்.ஏக்கள் ஈடுபட்டதால் அனைவரையும் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்பட அனைத்து திமுக எம்.எல்.ஏக்களும் சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் வெளியேற்றப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது மட்டுமின்றி போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது. எனவே சாலைமறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.