வெற்றிடம் குறித்து அறிவியல்பூர்வ விளக்கம் அளித்த ஸ்டாலின்

  • IndiaGlitz, [Monday,March 26 2018]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல்நலம் காரணமாக தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெற்றிடத்தை நான் நிரப்பவே அரசியலுக்கு வந்துள்ளேன் என்று ரஜினிகாந்த் சமீபத்தில் கூறினார். கமல்ஹாசனும் வெற்றிடத்தை நிரப்புவார் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஈரோட்டில் நடைபெற்ற திமுக மண்டல மாநாட்டில் பேசியபோது வெற்றிடம் குறித்து ஒரு அறிவியல் பூர்வ விளக்கத்தை அளித்தார். அவர் கூறியதாவது: தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது போன்ற ஒரு மாயை திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருகிறது. வெற்றிடம் என்பது ஏற்பட்ட அடுத்த கணமே நிரப்பப்பட்டுவிடுகிறது என்பது அறிவியல் என்று கூறினார். மேலும் இதனையே அவர் ஆங்கிலத்தில் 'A Vaccum is filled as it is created' என்றும் ஸ்டாலின் கூறினார்.

மேலும் ஒருசிலர் அரசியல் கட்சி ஆரம்பித்து எந்த பக்கம் செல்வது என்று முடிவெடுக்காமல் மய்யத்தில் நின்று கொண்டிருப்பதாகவும், இன்னும் ஒருசிலர் வெற்றிடத்தை நிரப்பலாம் என கற்பனை குதிரையில் பயணம் செய்து கொண்டிருப்பதாகவும், அவர் கமல் மற்றும் ரஜினியை மறைமுகமாகவும் தாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.