தமிழகத்தில் விநாயகர் ஊர்வலத்திற்கு ஏன் தடை? முதல்வர் விளக்கம்!
- IndiaGlitz, [Tuesday,September 07 2021]
கேரளாவில் சமீபத்தில் கொண்டாடப்பட்ட ஓணம், பக்ரீத் பண்டிகைகளால் அங்கு கொரோனா அதிகரித்ததைக் கவனத்தில் கொண்டே தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “ஓணம், பக்ரீத் தளர்வுகளால் கேரளாவில் கொரோனா அதிகரித்ததை கவனத்தில் கொண்டே தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வராததால் மக்களை பாதுகாக்கவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்களுக்கு 10,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். சிலை செய்யும் 3 ஆயிரம் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிதி ரூ.5 ஆயிரத்துடன் கூடுதலாக ரூ.5ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்“ என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.