விஜயகாந்த் மறைவு: ஸ்டாலின், அமித்ஷா, ராகுல் காந்தி, நிர்மலா சீதாராமன், அண்ணாமலை இரங்கல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு அகில இந்திய அளவிலும் தமிழக அளவிலும் பல அரசியல்வாதிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்:
அன்பிற்கினிய நண்பர் - தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன்.
நல்ல உள்ளத்திற்குச் சொந்தக்காரரான நண்பர் விஜயகாந்த் அவர்கள் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த சாதனையாளர். நடிகராக, நடிகர் சங்கத் தலைவராக, அரசியல் கட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஏற்றுக்கொண்ட பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னைச் சார்ந்த அனைவருக்கும் உறுதுணையாக இருந்தவர். குடும்ப நண்பராக என்னிடம் பழகியவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மீது என்றென்றும் தனிப்பாசம் கொண்டவர்.
தனது திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளைத் தலைவர் கலைஞர் தலைமையில் நடத்திய தமிழ் உணர்வாளரான நண்பர் விஜயகாந்த், நடிகர் சங்கத்தலைவராக இருந்தபோது தலைவர் கலைஞர் அவர்களின் கலையுலகப் பொன்விழாவைப் பாராட்டி, திரையுலகின் சார்பில் மாபெரும் விழா எடுத்து, தங்கப் பேனாவை பரிசாக அளித்தவர். தலைவர் கலைஞர் அவர்கள் உடல்நலன் குன்றியிருந்தபோது, நேரில் வந்து உடல்நலன் விசாரித்து சென்றதுடன், தலைவர் கலைஞர் மறைவெய்ந்தியபோது, வெளிநாட்டில் இருந்த நண்பர் விஜயகாந்த் கண்ணீர் மல்க காணொளி அனுப்பி தன் இரங்கலைத் தெரிவித்ததையும், வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் விமான நிலையத்திலிருந்து நள்ளிரவில் நேராகச் சென்னை கடற்கரையில் உள்ள தலைவர் கலைஞரின் ஓய்விடம் சென்று தன் வணக்கத்தைச் செலுத்தியதையும் எவரும் மறக்க முடியாது.
தமிழுணர்வும் தாராள மனமும் கொண்ட உன்னத மனிதரான நண்பர் விஜயகாந்த் அவர்களுடன் கலைத்துறையில் இணைந்து செயல்பட்ட காலங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வசனத்தில் விஜயகாந்த் கதாநாயகனான நடித்த ‘மக்கள் ஆணையிட்டால்’ என்ற படத்தில், கலைஞர் எழுதிய பாடல் காட்சியில் நானும் பங்கேற்றிருந்தது நினைவில் மலர்கிறது. அவருடனான நட்பு எந்தக் காலத்திலும், எத்தகைய அரசியல் சூழலிலும் மாறவேயில்லை. நண்பர் விஜயகாந்த் உடல்நலன் குன்றியிருந்த நிலையில், இரண்டு முறை நேரில் சென்று சந்தித்து, அவர் விரைந்து நலம் பெற விரும்பினேன். இயற்கை இரக்கமின்றி என் நண்பரின் வாழ்வை எடுத்துக் கொண்டிருக்கிறது.
கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும். இந்த மிகத் துயரமான சூழலில், என்னை நானே தேற்றிக் கொண்டு, கேப்டன் விஜயகாந்த்தை இழந்து தவிக்கும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும், திரையுலகத்தினருக்கும், இரசிகர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா:
தேமுதிக தலைவரும், தமிழ் திரையுலகில் மூத்த நடிகருமான விஜயகாந்த் அவர்களின் மறைவு குறித்து அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள் தனது திரை மற்றும் ஆஃப்ஸ்கிரீன் பாத்திரங்கள் மூலம் மக்களிடையே தேசபக்தியை தூண்டினார். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் ஷாந்தி ஷாந்தி.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்:
மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் அவர்களை ‘பசிபிணி தீர்த்த பொன்மன வள்ளல்’ என்று அஞ்சலி செலுத்துவோம். அவரை இழந்துவாடும், அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி இரங்கல் தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அரசியல் மற்றும் சினிமாவிற்கு விஜயகாந்த் ஆற்றிய பங்களிப்பு லட்சக்கணக்கான இதயங்களில் அழியா முத்திரையாக உள்ளது. "துயரமான இந்த நேரத்தில் விஜயகாந்தின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை:
தேமுதிக தலைவர், மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்கள் காலமானார் என்ற செய்தி, மிகுந்த வருத்தமும் மனவேதனையும் அளிக்கிறது. தென்தமிழகத்தில் பிறந்து, தென்னிந்தியத் திரையுலகையே கட்டியாண்ட பெருமைக்குரியவர். ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய மாமனிதர். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர்.
தன்னலமற்ற தலைவர். தமிழ்மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர். கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர். சொல்லொன்று செயலொன்று என்றில்லாது, சொன்ன சொல் வழி நின்றவர். பாசாங்கில்லாத மனிதர். பாரதப் பிரதமர் பேரன்பைப் பெற்றவர்.
கேப்டன் விஜயகாந்த் அவர்களது மறைவு, தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு. அவரது இன்னுயிர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவரது புகழ் என்றும் அவர் பெயரை நிலைத்திருக்கச் செய்யும்.
கேப்டன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும், தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய, இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
Immerse Yourself in the Melodies of Vijayakanth!
Dive into the soulful tunes and timeless classics by Vijayakanth. Click the link below to access a curated compilation of his greatest hits!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments