எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி. ஒரு முன்னோட்டம்
- IndiaGlitz, [Thursday,July 09 2015]
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மன்னர் காலத்து கதை என்பது ஒரு புதுமையான விஷயம் இல்லை. எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் இருந்தே சரித்திரக் கதை திரைப்படங்களை பார்த்து பழகியவர்கள் நாம். ஆனால் ஒரு சரித்திர திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராவது தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்திய திரையுலகிலேயே இதுதான் முதல்முறை. அதுமட்டுமின்றி சரித்திரக்கதையை நவீன தொழில்நுட்பங்களுடனும், ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகளுடனும் இணைத்திருப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகமாகியுள்ளது.
'ஈ'யை வைத்தே இமாலய திரைப்படம் எடுத்தவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. அப்படியிருக்கும்போது பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, நாசர், சத்யராஜ் போன்ற இமாலய நடிகர்களுடன் சேர்ந்தால் சும்மா இருப்பாரா? டிரைலரை பார்க்கும்போதே பிரமிப்பாக இருக்கின்றது. தமிழ் சினிமா ரசிகர்கள் 'ஐ' படத்தின் டிரைலருக்கு பின்னர் அதிகளவு ஆச்சரியப்பட்டது பாகுபலி' படத்தின் டிரைலர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நமக்கு தெரிந்த வரையில் சரித்திர படம் என்றாலே மூன்று மணி நேரத்திற்கும் மேல் ஓடும் நீளமான படமாகத்தான் இருக்கும். ராஜ ராஜ சோழன், நாடோடி மன்னன் காலத்தில் இருந்து பாலிவுட்டில் வெளிவந்த ஜோதா அக்பர் திரைப்படம் வரை 3 மணி நேரத்திற்கும் மேல்தான் அனைத்து படங்களும் இருந்தன. ஆனால் இந்த படம் 2 மணி நேரம் 38 நிமிடங்கள் மட்டுமே இருப்பதால் மக்கள் உறுதியாக ரசிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.ராஜமவுலி கடந்த 2001ஆம் ஆண்டில் இருந்து பல திரைப்படங்கள் இயக்கியிருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு அவரை மாவீரன், நான் ஈ படங்களின் மூலம்தான் நன்கு அறிந்தார்கள். அதன் பின்னர் வெளியாகும் இந்த 'பாகுபலி' கண்டிப்பாக முந்தைய இரண்டு படங்களைவிட மாபெரும் வெற்றியை தமிழக ரசிகர்கள் கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இந்த படத்தில் பணியாற்றிய இயக்குனர் உள்பட மொத்தம் 25 பேர் தேசிய விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் படத்தின் ஒவ்வொரு துறையும் நுணுக்கமாக கையாளப்பட்டிருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
இந்த படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, நாசர், சத்யராஜ் ஆகியோர் தென்னிந்தியா முழுவதும் பிரபலம் என்பதால் இயக்குனர் தைரியமாக மூன்று தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் வெளியிடுகின்றார். இந்திய திரையுலகை உலகமே திரும்பி பார்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான திரைப்படம் எப்படிப்பட்ட வரவேற்பை பெறவிருக்கின்றது என்பது நாளை தெரிந்துவிடும். படக்குழுவினர்களுக்கு நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.